தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகரும், கட்சித் தலைவருமான விஜய் இன்று (ஆக.22) அறிமுகம் செய்தார். நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சி தொடங்குவதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார்.
தொடர்ந்து, இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார். கட்சித் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்து, உறுதிமொழியை வெளியிட்டார்.
கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறம், யானை, நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள் இருக்கிறது. நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடுவில் இடம் பெற்றிருக்கும் சிவப்பு நிற வட்டத்தில் வாகை மலரும் அதைச் சுற்றி நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. 28 நட்சத்திரங்களில் 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும், இதர நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் என பலர் திரளாக பங்கேற்றனர். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“