Kanyakumari | Vijay Vasanth | கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியை சேர்ந்த சகாய ஆண்டனி அனீஸ், ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த இன்பேண்ட் விஜய், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சார்ந்த, நீடிஷோ ஆகியோர் குவைத் நாட்டிற்கு மீன்பிடித்தல் உள்பட பல்வேறு பணிகளுக்காக சென்றனர்.
இவர்களில் ஒருவர் 7 ஆண்டும் மற்றொருவர் 2 ஆண்டும் அங்கு பணிபுரிந்து வந்த நிலையில் ஊதியம், உணவு வழங்காமல் சித்திரவதை செய்ததால் வேறு வழியின்றி படகு மூலமாக மூன்று பேரும் மும்பை தப்பி வந்தனர்.
இவர்களை, மும்பை கடற்கரையில் கடலோர காவல் படையினர் பிடித்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதி எம்பி விஜய் வசந்த் இதற்காக மும்பையைச் சேர்ந்த சுனில் பாண்டே என்ற வழக்கறிஞர் மூலமாக சுமார் 7 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் வாதாடி வெளியே கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டார்.
மூன்று மீனவர்களும் குடும்பத்தினர் உடன் இன்று (பிப்.19,2024) நாகர்கோவிலில் உள்ள எம்.பி அலுவலகம் வந்து அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இது குறித்து விஜய் வசந்த் எம் பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது " சவுதி அரேபியா, குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.
அவர்களுக்கு உரிய பணியும், உணவு வழங்கப்படாமல் சிரமங்களை சந்தித்து வருகின்றனர் அவர்களை எல்லாம் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் நெருங்குவதை ஒட்டி இவர்களை மீட்க நடவடிக்கை எடுத்ததாக சில அரசியல் கட்சிகள் கூறி வந்தாலும் அவர்களை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுத்தது, மனித நேயத்தில்தான்” என்றார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“