பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸூக்கு நடிகர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தின் மக்கள் இயக்கமாக மாற்றிய காலத்திலிருந்து அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சுக்கள் தொடர்ந்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் இயக்கம் அதன் பின் எந்த ஒரு தேர்தலிலும் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் இருந்து வருகிறது.
அதேநேரம், விஜய் மக்கள் இயக்கம் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கணிசமான இடங்களை கைப்பற்றியது. இதன் பிறகு இயக்கம் அதன் அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, முக்கிய தலைவர்களின் பிறந்த நாட்களின் போது அவர்களின் திருவுருவ சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர், தமிழகத்தில் உள்ள 234 தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் பரிசு அளித்தார். மேலும், அவர்களுக்கு கல்வி உதவி தொகைகளையும் வழங்கினார்.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாளின் போது அவர்களை தொலைபேசியில் அழைத்து நடிகர் விஜய் வாழ்த்துச் சொல்லி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு தொலைபேசி மூலம் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் பா.ம.க தலைவர் அன்புமணி இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதனையடுத்து அன்புமணியை செல்போனில் தொடர்பு கொண்ட விஜய் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பிறகு விஜய் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் உள்ளிட்ட விஷயங்களை அன்புமணி கேட்டுள்ளார். அதற்கு விஜய்யும் தான் நடித்து வரும் படங்கள் குறித்து கூறியுள்ளார். அதன்பிறகு தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய்க்கு அன்புமணி நன்றி தெரிவித்துள்ளார். இந்த உரையாடல் சில நிமிடங்கள் நீடித்ததாகக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“