தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் "மாவீரம் போற்றுதும்... மாவீரம் போற்றுதும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இலங்கை தமிழீழ போரில் உயிர் நீத்தவர்களுக்காக மாவீரர் நாள் என்ற நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27-ஆம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் முன்னெடுத்து வந்தனர். இலங்கையில் இறுதிக்கட்ட போருக்கு பின்னர் இந்த மாவீரர் நாள் தமிழ் ஆர்வலர்களால் தொடர்ச்சியாக நினைவு கூறப்பட்டு வருகிறது.
இந்த நாளை நினைவு கூறும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ம.தி.மு.க போன்ற கட்சியினர் மாவீரர் நாளை அனுசரித்தனர். மேலும், பல்வேறு இடங்களில் மாவீரர் நாளை அனுசரிக்கும் விதமான கூட்டங்களும் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், மாவீரர் நாளை நினைவு கூறும் விதமாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக, "மாவீரம் போற்றுதும்... மாவீரம் போற்றுதும்" என அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அப்போது, கட்சியின் கொள்கை தலைவர்களாக பெரியார், அம்பேத்கர் போன்றோரை விஜய் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“