மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே சுதீஷ் உள்ளிட்டோர் திங்கள்கிழமை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக் குறைவால் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி காலமானார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே சுதீஷ் உள்ளிட்டோர் தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (23.12.2024) காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் தே.மு.தி.க கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள் எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், இளைஞரணி செயலாளர் நல்லதம்பி ஆகியோர் நேரில் சந்தித்து, மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 28ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி, அந்நினைவு தின நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
அப்போது, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“