'சபாநாயகர் தனபால் இழிவாக பேசி என்னை வெளியேற்றினார்'! - விஜயதாரணி எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

சபாநாயகர் தனபால் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி புகார்

சபாநாயகர் தனபால் தம்மை இழிவான முறையில் பேசி, சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 29ம் தேதி முதல், தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. அதில், வேளாண்மை துறை மானியக் கோரிக்கைக்கான விவாதம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரின் போது, விளவங்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி குமரி மாவட்டப் பிரச்சனைகளைப் பற்றி பேச முயன்றார். அதற்கு, சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார்.

இதனால், சட்டப்பேரவை விதிகளை மீறி நடந்து கொண்டதாக கூறி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

இதனையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் விஜயதாரணி அளித்த பேட்டியில், தமது தொகுதி மக்களின் பிரச்னைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற முன்னதாகவே கேட்டும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார். அதைத் தொடர்ந்து தாம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பாதிக்கபப்ட்டவர்களுக்கு இழப்பீடு கேட்ட தம்மை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். அமைச்சருடன் தனியாக பேசிக் கொண்டீர்களா? என்று சபாநாயகர் கேட்கிறார் என்றும் ஒரு சபாநாயகர், அநாகரீகமாக பெண் எம்.எல்.ஏவை கேட்பது சரியா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அவைக்காவலர்களும் மிகவும் தம்மிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக அவர் புகார் தெரிவித்தார்.

விஜயதாரணியின் இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close