ராகுல் காந்திக்கே சவால் விட்ட விஜயதரணி : நடவடிக்கை பாய்கிறதா?

விஜயதரணியின் பேச்சு, ராகுல் காந்திக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை பாயக்கூடும் என தெரிகிறது.

விஜயதரணியின் பேச்சு, ராகுல் காந்திக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை பாயக்கூடும் என தெரிகிறது.

விஜயதரணி, தமிழ்நாடு காங்கிரஸில் அவ்வப்போது புயலைக் கிளப்பக் கூடியவர்! முந்தைய மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடன் இவருக்கு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மகளிரணி மாநிலத் தலைவர் பதவியை இழந்தார்.

விஜயதரணியின் அடுத்த சர்ச்சையாக, ஜெயலலிதா உருவப் பட திறப்பு விவகாரம் அமைந்துவிட்டது. கடந்த திங்கட்கிழமை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதா உருவப் படம் திறப்பு விழாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்தார்.

ஆனால் அவர் அறிவிப்பு வெளியிடும் முன்பே, ‘ஜெயலலிதா உருவப் படம் திறப்பு விழாவில் நான் பங்கேற்பேன்’ என விஜயதரணி கூறினார். அடுத்த நாள் தலைமைச் செயலகம் வந்த விஜயதரணி, ‘மாநில தலைவரின் அறிவிப்புக்கு மரியாதை கொடுத்து படத் திறப்பு விழாவில் பங்கேற்க வில்லை. ஆனாலும் ஜெயலலிதா படத் திறப்பு விழாவுக்கு ஆதரவு என்கிற எனது நிலையில் மாற்றம் இல்லை’ என்றார்.

சட்டமன்ற அரங்கினுள் சென்ற விஜயதரணி, ஒரு பூங்கொத்தை சபாநாயகர் தனபாலிடம் கொடுத்து, ஜெ. படத் திறப்புக்கு வாழ்த்தையும் தெரிவித்தார். இது குறித்து அன்று கருத்து தெரிவித்த திருநாவுக்கரசர், ‘தனிப்பட்ட கருத்து கூற விஜயதரணிக்கு உரிமை இருக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை. அவரது கருத்துகளை தலைமைக்கு தெரியப்படுத்துவோம்’ என கூறினார்.

இந்த அளவுக்கு விஜயதரணி நிறுத்தியிருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் அதன்பிறகு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயதரணி, ‘கட்சி என் மீது நடவடிக்கை எடுத்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். நான் எங்கள் தலைவர் ராகுல் காந்தியையே நேரடியாக கேட்கிறேன். இந்த நிகழ்ச்சி மூலமாக கேட்கிறேன்.

‘ஜெயலலிதாவின் மரணத்தில் கடைசி சடங்கு வரை வந்து கலந்து கொள்வதற்கு உங்களுக்கு மனம் இருந்தது. அன்னைக்கி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அதே செல்வி ஜெயலலிதாதான் அவங்க! ஆஸ்பத்திரி உள்ள வரை போய் விசாரிச்சீங்க. அன்னைக்கி நாங்கெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட வரணும்னு கேட்டப்ப எங்களுக்கு வாய்ப்பில்லை.

அன்னைக்கெல்லாம் அவங்க குற்றவாளின்னு தெரியலையா? திருநாவுக்கரசர் அவர்களே அன்னைக்கு வந்தாரில்லையா? அன்னைக்கு அவருக்கு தெரியலையா? இன்னைக்கு நான் மகிளா காங்கிரஸ் பொறுப்பில், பெண்களுக்காக பேச வேண்டிய இடத்தில் இருப்பவள்! சாதாரண பெண்களுக்காகவும் பேசணும், முதலமைச்சராக இருந்த பெண்ணுக்காகவும் பேசணும். தனிப்பட்ட முறையில் என்னுடைய உரிமையை பறிப்பதற்கு யாராலும் முடியாது.’ என்றார் விஜயதரணி.

ராகுல் காந்தியாலும், கட்சியாலும் முடியாதா? என நெறியாளர் கேட்டபோது, ‘யாராலும் முடியாது. ஒரு பெண்ணுக்கு சப்போர்ட் பண்ணுவது என் தனிப்பட்ட உரிமை’ என்றார் விஜயதரணி. இவரது பேச்சு ராகுல் காந்திக்கு சவால் விடுவது போல அமைந்துவிட்டதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

முதல் நாளில் சபாநாயகரை சென்று விஜயதரணி சந்தித்தபோது, காங்கிரஸார் யாரும் விஜயதரணிக்கு எதிராக கொந்தளிக்க வில்லை. ஆனால் தலைமைச் செயலகத்தில் அளித்த பேட்டியில் இந்திரா காந்தியுடன் ஜெயலலிதாவை ஒப்பிட்டு பேசிய விவகாரத்திலும், டி.வி. விவாதத்தில் ராகுலுக்கு சவால் விடும் வகையில் பேசியதாலும் இப்போது காங்கிரஸ் வட்டாரத்தில் இருந்தே கண்டனங்கள் பாய ஆரம்பித்திருக்கின்றன.

இது தொடர்பாக இன்று காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டியில், ‘விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டார். இந்திரா காந்தியுடன் ஜெயலலிதாவை ஒப்பிட்டு பேசியதை காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வப் பெருந்தகை கண்டித்து அறிக்கை விட்டிருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இது தொடர்பாக ராகுல் காந்திக்கும், மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக்கிற்கும் கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார். எனவே அதன் அடிப்படையில் விஜயதரணி மீது கட்சி நடவடிக்கை எடுக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் மாநில நிர்வாகி ஒருவர் இது குறித்து கூறுகையில், ‘எம்.எல்.ஏ.வாக அவர் இருக்கிற காரணத்தால், இப்போது கட்சி நடவடிக்கை இருக்காது. ஆனாலும் அவரை மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மூலமாக கண்டிக்கும் வாய்ப்பு இருக்கிறது’ என்றார்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close