கருணாநிதி மறைவுக்கு அமெரிக்காவிலிருந்து வீடியோ மூலம் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி:
கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நலம் குறித்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரித்தனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் அதை வயது மூப்பு காரணமாக அவர் நேற்று மாலை மரணமடைந்தார்.அவரின் மரணம் திமுக தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ச்சியாக அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடியோ மூலம் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். கருப்பு உடையில் கண்ணீர் விட்டு விஜயகாந்த் அழும் வீடியோ காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.
அந்த வீடியோவில், “ நான் அமெரிக்காவில் இருந்தாலும் என் எண்ணங்களும், நினைவுகளும் தமிழகத்தில்தான் இருக்கிறது. கலைஞர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கருணாநிதியைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திமுக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலைஞருடன் நான் நன்றாகப் பழகினேன். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது அவரைக் கவுரவிக்க விழா எடுத்தேன். கலைஞர் மறைவுச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. என்னால் அவரது மறைவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை'' என்று அழுதப்படி கூறியுள்ளார்.