தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ராஜா(40) என்பவர் தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலை பார்க்கிறார். அவர் மனைவி உஷா(36). திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தனர். இந்நிலையில், உஷா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் ஆனார். ராஜா தனது மனைவியுடன் பைக்கில் நேற்று மாலை 6.30 மணியளவில் திருச்சி நோக்கி வந்தார். அப்போது, ராஜா ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டியதால், அவரது பைக்கை போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் தனது ஜீப்பில் துரத்தி வழிமறித்து, எட்டி உதைத்திருக்கிறார். இதில் ராஜா, உஷா இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த வேன் மோதி உஷா பலியானார். இதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவலர் காமராஜின் செயல்பாட்டால் உயிரிழந்த அப்பாவி கர்ப்பிணி பெண் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களை காக்கவேண்டிய காவல்துறை, மக்களை காவுவாங்கும் துறையாக இல்லாமல், சேவை செய்யும் காவல்துறையாக இருக்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.