அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடித்து திரும்பிய விஜயகாந்த், சுமார் 10 மணி நேரத்துக்குப் பிறகு விமானநிலையத்திலிருந்து வெளியே வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றிருந்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமானம் மூலம் பாரிஸ் வழியாக இன்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு விஜயகாந்த் வந்தடைந்தார். உடனடியாக அவர் வெளியே வருவார் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்க, விஜயாகாந்த் விமான நிலையத்திலேயே தங்கிவிட்டார். பிறகு, காலை 9 மணி அளவிலேயே வெளியே வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/a618-300x217.jpg)
அவரை வரவேற்க ஆயிரக்கணக்கானத் தொண்டர்கள் விமானநிலையத்தில் திரண்டனர். ஆனால், மதியம் மணி 1 மணியை நெருங்கிய நிலையிலும் அவர் விமான நிலையத்திலிருந்து வெளியே வரவில்லை. சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக அவர், விமானநிலையத்திலேயே இருந்து வந்தார். அதனையடுத்து, வெளியே காத்திருக்கும் தொண்டர்கள் கூச்சலிடத் தொடங்கினர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/a619-300x217.jpg)
இதற்கிடையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு விமானநிலையத்தில் இருக்கும் நான்கு சக்கர பேட்டரி வாகனத்தில் விஜயகாந்த் வெளியே வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதற்கிடையில், சுமார் 11 மணிக்கு மியாட் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் விமான நிலையத்துக்கு வந்தனர். விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று அயற்சி ஏற்பட்டதன் காரணமாக, அவர் வெளியே வருவதற்கு தாமதம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. விமானநிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த், வேனில் சாலிகிராமத்திலுள்ள இல்லத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். அமெரிக்காவில் மேல்மட்டச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. 25 மணி நேர பயண செய்ததால், அசதியின் காரணமாக விஜயகாந்த் தூங்கிவிட்டார். தூங்கி எழுந்து டிபன் சாப்பிட்டு வந்ததால் தாமதமாகிவிட்டது. எந்தக் கட்சிகளும் இதுவரையில் தங்களுடைய கூட்டணி பற்றி அறிவிக்கவில்லை. உரிய நேரத்தில் விஜயகாந்த் கூட்டணி குறித்து அறிவிப்பார். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து எங்களிடம் பேசுவருகிறார்கள்’ என்று தெரிவித்தார்.