விஜயகாந்த் வீடு திரும்பினார் : தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பியுள்ளார் .
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைபாடு காரணமாக சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். அங்கு பரிசோதனை முடிவடைந்த பிறகு சென்னை திரும்பிய விஜயகாந்திற்கு, உடல்நிலையில் சற்று நலிவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, விஜயகாந்த் கவலைக்கிடமாக உள்ளதாக வதந்தி பரவியது. இதனை மறுத்து அக்கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக நிர்வாகி சுதீஷ், "எப்போதும் நடக்கும் பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எந்த வித வந்ததிகளையும் மக்கள் நம்ப வேண்டாம்" என்றார்.
இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று அதிகாலை தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பி உள்ளார். அவரது உடல் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் வீடு திரும்பியிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியிருக்கும் தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் மேலும் முழுமையான அளவில் விரைந்து உடல்நலன் பெற்று, பொதுவாழ்வுப் பணிகளை முன்னெப்போதும் போல் தொடரவேண்டும் என்ற எனது விழைவினைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.