தேமுதிகவின் நிரந்தர பொதுச் செயலாளாராக விஜயகாந்தை தேர்வு செய்வதாக தேமுதிக பொதுக்குழு தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. இதுவரை தலைவராக இருந்து வந்த விஜயகாந்த் இப்போது, பொதுச் செயலாளராகியுள்ளார்.
தேமுதிக ஆரம்பித்து 13 ஆண்டுகள் ஆகிறது. இதுவரையில் கட்சியின் தலைவராக விஜயகாந்த் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் காரைக்குடி மாவட்டம் சிவகங்கையில் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தில் கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக விஜயகாந்தை தேர்வு செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதோடு கட்சியின் வளர்ச்சிக்காகவும், கட்சியின் நிர்வாகிகளை நியமிப்பது போல எந்தகைய முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் விஜயகாந்துக்கு வழங்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து கட்சியின் மாநில நிர்வாகிகள் பட்டியலை விஜயகாந்த் அறிவித்தார்.
மாநில அவைத்தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அழகாபுரம் மோகன்ராஜ் நியமிக்கப்படுகிறார். பொருளாளராக டாக்டர் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைச் செயலாளர்களாக, விஜயகாந்த்தின் மைத்துநர் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, ஏ.ஆர்.இளங்கோவன், திருமதி.சந்திரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு, விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.