தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்சநீதிமன்றம் விதித்த கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. 6 வாரகாலம் கெடு கொடுத்தும், அதனை நிறைவேற்றாதது தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் செய்யும் துரோகம். 25 ஆண்டுகாலமாக நீண்ட நெடிய தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மத்திய அரசின் முடிவுகளை மிகுந்த ஆவலுடன் தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை, கெடுவிற்குள் மத்திய அரசு வெளியிடாதது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. கர்நாடக பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதா என்ற ஐயத்தையும் அவர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கிட்டத்தட்ட 50 நாட்கள் உச்சநீதிமன்றம் கெடுவிதித்திருந்தும், காலக்கெடு முடியும் வரை அதனை அமைக்காமல் புறம்தள்ளி மத்திய அரசு காலம் தாழ்த்தியுள்ளது. இது ஒட்டுமாத்த தமிழக மக்களை வஞ்சித்துவிட்டதாக கருதுவதால், இதற்கு தேமுதிக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் தேர்தல்களை மட்டும் எண்ணி மத்திய, மாநில அரசுகள் செயல்படுவது போலவும், மக்களின் நிலையை அரசுகள் யோசிப்பதாக தெரியவில்லை. மாநிலத்தில் உள்ள ஆளும் கட்சியினர் கடுமையான முடிவை எடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமாத்த மக்களும் இந்த இரண்டு ஆட்சிகளையும் புறந்தள்ளுவது உறுதி என மக்கள் மனதில் எழுந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.