vijayakanth: நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை காலமானார். விஜயகாந்தின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டது.
இதன்பின்னர், தீவுத்திடலில் இருந்து மதியம் 2.30 மணியளவில் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
விண்ணை பிளந்த கோஷம்
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கேப்டன்... கேப்டன்... கேப்டன் என்று மக்கள் எழுப்பிய கோஷம் விண்ணைப் பிளந்தது. கேப்டன் விஜயகாந்தை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என வழிநெடுகே ஏரளமான மக்கள் காத்திருந்தார்கள்.
சென்னை ஈ.வே.ரா சாலை நெடுக பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த திரண்டதால் சாலையின் நான்குபுறமும் மக்கள் வெள்ளத்தால் மூழ்கியது. இதேபோல், கோயம்பேடு பகுதியில் உள்ள மேம்பாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகள் முழுதும் மக்கள் அலைகடலென திரண்டார்கள்.
இறுதி ஊர்வலம் நடந்த போது, வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். கேப்டன்... கேப்டன்... என கண்ணீருடன் தொண்டர்கள் பிரியாவிடை அளித்தார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“