Vijayakanth Tamil News: தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகிய சிறிது நேரத்தில், தொண்டர்கள், ரசிகர்கள் என மக்கள் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஆனால், விஜயகாந்த் அவர்களுக்கு லேசான கொரோனா தொற்றுக்கான அறிகுறி மட்டுமே இருந்தது என்றும் தற்போது பூரணமாகச் சரிசெய்யப்பட்டு அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்றும் கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுடன் ஆரம்பமான 2020-ம் ஆண்டு, பொருளாதாரம் முதல் மனிதர்கள் இழப்புகள் வரை ஏராளமான மனதிற்கு ஏற்க முடியாத பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. தீர்வு கண்டுபிடிக்கப்படாத மிகவும் வேகமாகப் பரவும் கோவிட்-19-ஐ கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் நீண்ட நாள்களுக்கு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. எனினும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. சாமானிய மக்கள் முதல் பாடகரும் நடிகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் வரை இந்த கொரோனா வைரஸின் பிடியில் சிக்கினர். அந்த வரிசையில் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
கடந்த சில மாதங்களாகவே, உடல்நலக்குறைவால் கட்சிப் பணிகளில் கேப்டன் விஜயகாந்த் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத நிலையில், கொரோனா பாதிப்பு என்ற தகவல் பலரை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனால், "கழகத் தலைவர் கேப்டன் அவர்கள் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக கேப்டன் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகச் சென்ற கேப்டன் விஜயகாந்த்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார்” என தே.மு.தி.க கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இந்த அறிக்கை பலரின் கேள்விகளுக்கும் வதந்திகளுக்கும் விடையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், "தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கோவிட்-19 சோதனையில் கொரோனா தோற்று இருப்பது கடந்த 22 -ம் தேதி உறுதிசெய்யப்பட்டது. தற்போது அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் கூடிய விரைவில் முழுமையாகக் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்த விஜயகாந்த், செப்டம்பர் மாதம் 14-ம் தேதி தேமுதிக-வின் 14-வது ஆண்டு விழாவிற்காக தன் கட்சி அலுவலகத்தில் கோடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மருத்துவமனையில் இருக்கும் கேப்டன் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டுமென தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டப் பல கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் பழனிசாமி, "தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, இன்று காலை அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம், திரு.விஜயகாந்த் அவர்களது உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன். விஜயகாந்த் அவர்கள் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று வாழ்த்தியுள்ளார்.
"தே.மு.தி.க. தலைவரும் அருமை நண்பருமான விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன்.
அவர் விரைவில் முழுநலம் பெற்று பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தன் வாழ்த்தை ட்விட்டரில் திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.