தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாக வெளியான தகவலுக்கு கட்சித் தலைமை மறுப்பு தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நவ.18 ஆம் தேதியன்று அனுமதிக்கப்பட்டார்.
அவர் வழக்கமான பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், தேமுதிக இன்று (நவ.20) வெளியிட்ட செய்திக் குறிப்பில், ’தேமுதிக தலைவர் பொதுச்செயலாளர் விஜயகாந்த், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ’கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு தொடர்ந்து இருமல் பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நானும் அந்த மருத்துவ நிர்வாகத்தோடு பேசினேன்.
விஜயகாந்தின் உடல்நலம் சீராக இருக்கிறது. இன்று காலையிலும் பேசினேன். அவர் நன்றாக இருக்கிறார். ஐசியுவில் இருக்கிறாரே தவிர, அவரது உடல்நிலை சீராகவே இருக்கிறது. அந்த தனியார் மருத்துவமனையில் அவரை மிகச் சிறப்பாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள், என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“