Advertisment

அனல் குரலுடன் மீண்டும் வாருங்கள் விஜயகாந்த்: ஒரு உருக்கப் பதிவு

Vijayakanth: விஜயகாந்தின் உடல் நலம் மேம்படுத்த வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. சிம்மக் குரலோடு வாருங்கள் கேப்டன்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Vijayakanth Health: சட்டமன்றத்திலேயே ஜெயலலிதா முன்பு 'தில்' காட்டியவர், மனதில் பட்டதை பட்டென்று பேசுபவர், முன் கோபக்காரர் என பல்வேறு பாராட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் சொந்தக்காரர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சில ஆண்டுகளாகவே உடல் நலத்தில் தீவிர அக்கறை காட்ட வேண்டியவராக இருக்கிறார்.

Advertisment

2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு போய் வந்தார். அங்கிருந்து வந்த கையோடு தேர்தல் பிரச்சாரத்தில் குதித்தார். எனினும் அந்தத் தேர்தலிலேயே பிரேமலதாதான் அதிக மாவட்டங்களில் சுற்றிச் சுழன்றார்.

அத்தேர்தலில் தேமுதிக தோல்வியை தழுவியிருந்தாலும், விஜய்காந்த் மனம் தளரவில்லை. ஜூலை 9-ம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு, சிறுநீரகம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேல்சிகிச்சைக்காக அம்மாதமே மீண்டும் சிங்கப்பூர் பறந்தார்.

2016 சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்த பின்னர், அவர் தனது உடல்நலம் மீது மேலும் அக்கறை காட்ட வேண்டியவரானார். 2017 மார்ச் மாதம் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், தொடர்ந்து 10 நாட்கள் சிகிச்சையில் இருந்தார். நவம்பர் இறுதியில் மீண்டும் சிங்கப்பூர் பறந்தார். மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்த போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகின.

இதன் தொடர்ச்சியாக, டிசம்பரில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போது, வேனில் இருந்தபடியே பிரச்சாரம் செய்தார். எனினும் விஜயகாந்தின் உடல் நலம் இன்னமும் மேம்படுத்த வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. எண்ணத்தில் உள்ளதை வார்த்தையில் வடிக்க முடியாத சிரமமும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தாண்டு ஜூலையில் குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். உடல்நலன் ஓரளவு தேறி, மகன் சண்முகபாண்டியன், மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவின. அச்சமயத்தில் கலைஞர் மறைந்த செய்தி கேட்டு, அவர் கண் கலங்கிய வீடியோவும் வைரல் ஆனது. அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன், நேராக கருணாநிதியின் சமாதிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தியதும் அனைவரது நெஞ்சையும் நெகிழச் செய்தது.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தாலும், பழைய மாதிரி அவரது பேச்சு சரியாக வருவதில்லை. விஜயகாந்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, மகளிரணியை கவனித்து வந்த பிரேமலதாவிற்கு பொருளாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மகன் விஜயபிரபாகரனும் அரசியல் அரிதாரம் பூசத் தொடங்கிவிட்டார்.

தற்போது விஜயகாந்த் சில பரிசோதனைகளுக்காக ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தேமுதிக வட்டாரத்தில் கூறுகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் ஆஸ்திரேலியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டிசம்பர் 2-ம் தேதி கோயம்பேட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிகவின் புதிய இணையதளத்தை விஜயகாந்த் தொடங்கி வைத்தார். பல்வேறு அணிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் அவரிடம் வாழ்த்து பெற்றனர்.

அரசியல் ரீதியாக விஜய்காந்த் மீது விமர்சனங்கள் இருக்கலாம். தனிப்பட்ட வகையில் அவர் எப்பேற்பட்ட மனிதர் என்பது பழகியவர்களுக்குத் தெரியும். 90-களில் சினிமாக் கனவுகளுடன் கோடம்பாக்கம் வீதியில் அலைந்து திரிந்தவர்களுக்கு அட்சயப் பாத்திரமாக அமைந்தது அவரது அலுவலகம்! அன்று எதையும் எதிர்பார்த்து அதை அவர் செய்யவில்லை.

அரசியலுக்கு வந்த பிறகும் மனதில் பட்டதை சட்டென்று பேச்சில் உடைத்தெறியும் விஜயகாந்தின் குரலை கேட்க அவரது கட்சியினர் மட்டுமல்ல, தமிழகமே காத்திருக்கிறது. மீண்டும் அனல் தெறிக்கும் சிம்மக் குரலோடு வாருங்கள் கேப்டன்!

 

Vijayakanth Dmdk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment