Prabhakaran vijayakanth’s political entry: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி, கட்சி கொடி ஏற்றம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்று அரசியலில் குதித்தது அனைவரும் அறிந்த ஒன்று. துணை முதல்வர் ஓ.பி.எஸின் மகன் ரவீந்திரநாத்திற்கு கட்சியில் தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவ்வளவு ஏன்?.. புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூட தன் மகன் ஷ்யாமை ஒட்டபிடாரம் இடைத்தேர்தலில் களமிறக்க முடிவெடுத்திருக்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து, ஆளாளுக்கு தங்கள் வாரிசுகளை களமிறக்கி வரும் நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும் தன் பங்கிற்கு தன் மகனை களத்தில் இறக்கியுள்ளது அரசியல் அரங்கில் சூட்டை கிளப்பியுள்ளது.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்க்கு தற்போது ஓய்வு தேவைப்படுகிறது. இதன் காரணமாக அவரது மனைவி பிரேமலதா, தே.மு.தி.க.வின் பொருளாளர் பதவியை சமீபத்தில் ஏற்றார். கட்சியின் அன்றாட நிர்வாகத்தை, விஜயகாந்தின் மைத்துனரும், தே.மு.தி.க. இளைஞரணி தலைவருமான சுதீஷ் கவனித்து வருகிறார். அடுத்த குடும்ப இறக்குமதியாக, விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரன், கடந்த மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கட்சியின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இது பிரபாகரனின் அரசியல் என்ட்ரியாகவே கருதப்பட்டது.
இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்ற தே.மு.தி.க நிர்வாகியின் மண விழாவில் பிரபாகரன் கலந்து கொண்டு வாழ்த்தினார். விஜயகாந்த்திற்கு எப்படி ஒரு வரவேற்பை வழங்குவார்களோ, அதே படாடோபத்தோடு பிரபாகரனை தே.மு.தி.க.வினர் வரவேற்றனர்.
பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கூட்டணி தொடர்பான விஷயங்களை கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்யும். தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டால், மாநிலம் முழுவதும் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய தயாராக இருக்கிறேன்." என்றார்.
இதன் தொடர்ச்சியாக, திருச்சி சிந்தாமணி பகுதியில் நடைபெற்ற கட்சியின் கொடியேற்று விழாவில் கலந்துகொண்டார். வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கிய பிரபாகரன், மேஜர் சரவணன் நினைவுத் தூணுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஆக, தமிழக அரசியலில் மேலும் ஒரு வாரிசு என்ட்ரி ஆகியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.