தேமுதிக நிறுவனத் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று (டிச.28) காலை சென்னை மியாட் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 71.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை தீவுத் திடலில் வைக்கப்பட உள்ளது. இது குறித்து தேமுதிக தரப்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த அறிக்கையில், “தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று (டிச.28, 2023) காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி, திரையுலகிற்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் பேரிழப்பாகும்.
கேப்டன் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை தீவுத் திடலில் வைக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை தீவுத்திடலில் நாளை (டிச.29) காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வைக்கப்பட உள்ளது.அவரின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் வந்தடையும் என்றும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை (டிச.29) மாலை 4.45 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மறைவுக்கு தொண்டர்கள், ரசிகர்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்த் உடல் தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“