14-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தேமுதிக: தொண்டர்களை தட்டியெழுப்பும் விஜயகாந்த்!

எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், அவதூறு வழக்குகள் வந்த போதும் பல சவால்களை சந்தித்து வீறுநடை போடுகிறது தேமுதிக

By: Updated: September 14, 2018, 04:25:57 PM

தேமுதிக 14ம் ஆண்டு : தேமுதிக தொடங்கி 14-வது ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், எதற்கும் அஞ்சாமல் இலக்கை அடைய வேண்டும் என, தமது தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “செப்டம்பர் 14-ம் தேதி தேமுதிக ஆரம்பித்து 14 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. தேமுதிகவுக்கு என்று தனி வரலாறு உண்டு, எந்தக் கட்சியிடம் இருந்தும் பிரிந்து வராமல் லஞ்சம், ஊழலுக்கு முற்றுபுள்ளி வைக்க, தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக அனைத்துத் துறைகளிலும் முன்னேற உறுதி கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி.

தமிழ்நாட்டில் நிலவும் விவசாயிகள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, வேலை வாய்ப்பு, மணல் கொள்ளை, டாஸ்மாக் கடைகளால் ஏற்படும் சீர்கேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமைகள், அண்டை மாநிலங்களுக்கிடையே உள்ள தண்ணீர் பிரச்சினை, சுகாதாரம், மருத்துவம், கல்வி, உள் கட்டமைப்பு, சாலை வசதிகள், போன்ற எத்தனையோ பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு தீர்வு காணவும் தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும், தேமுதிக தொடர்ந்து மக்களுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும்.

எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், அவதூறு வழக்குகள் வந்த போதும் பல சவால்களை சந்தித்து வீறுநடை போடுகிறது தேமுதிக. தேமுதிகவினர் உண்மை விசுவாசத்தின் பிரதிபலிப்பாகவும், முன் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் பல மடங்கு ஒற்றுமையாகவும், உறுதியோடும் இருந்து வரப்போகும் தேர்தல்களை சந்தித்து தேமுதிக இன்று தமிழ்நாட்டில் அசைக்கமுடியாத சக்தி என்றும், தமிழ்நாட்டில் யாரும் தவிர்க்கமுடியாத மாபெரும் இயக்கம் என்றும், உழைப்பால் உணர்த்த வேண்டும்.

தேமுதிக தமிழக மக்களிடத்தில் பட்டிதொட்டி என்று அனைத்து இடங்களிலும் வேறூன்றி தழைத்தோங்கி இருக்கிறது என்றால் இந்த இயக்கத்திற்காக அர்ப்பணிப்பு உணர்வோடும், விசுவாசத்தோடும் பாடுபடும் லட்சக்கணக்கான உண்மையான நிர்வாகிகளும், தொண்டர்களும் என்பதை நன்கு அறிவேன். தேமுதிக தனக்கென்று ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டு இருக்கிறது என்றால், அதற்கு முக்கியமாக சாதி, மதம், இனம் போன்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான கட்சியாக தொடர்ந்து பாடுபட்டு வருவதே.

எந்த வித வன்முறைக்கும் இடம்கொடுக்காமல் அறவழியில் மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வரும் இயக்கமாகும். கடினமான நேரத்தையும், காலத்தையும் தந்து, கடவுள் நம்மை சோதிக்கும் போதெல்லாம் பொறுமையாகக் காத்திருக்கும் உறுதிக்கு தொண்டர்கள் தரப்போகும் வெற்றிக்காக உயர்ந்த சிந்தனையோடு, தமிழக மக்கள் தேமுதிக மீது கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் உயர்த்தும் வண்ணம் செயல்பட வேண்டும்.

வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்பதைக் கருத்தில் கொண்டு, எதற்கும் அஞ்சாமல் எதிர்காலத்தில் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்க வேண்டும். உண்மையான கொள்கைக்காக லட்சியத்திற்காக கொண்ட பற்றின் காரணமாக தேமுதிகவில் உள்ள லட்சக்கணகான நல்ல உள்ளங்களுடன் என் பயணம் என்றும் தொடரும். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம் என்ற உறுதியோடும், இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்கிற நமது கொள்கைப்படி பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து தேமுதிக தொடக்க நாளில் வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும்” என விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Vijayakanths dmdk enters in 14th year

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X