vijayakanths properties : தேமுதி தலைவர் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி ஏலத்திற்கு விடப்படுவதாக பத்திரிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ. 5.52 கோடி கடன் பாக்கிக்காக இந்தியன் ஓவர்சிஸ் வங்கி ஏலத்தில் விடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன்.. இந்த பேருக்கு பின்னால் ஒலிக்கும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் குரல்களை இப்போதும் கேட்க முடியும். தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் வந்தால் நாங்கள் கண்டிப்பாக ஜெயிப்போம் என்று ஒற்றை காலில் நின்ற வேட்பாளர்கள் அதிகம்.இறுதியில் அவரே அரசியல் கட்சி ஆரம்பித்ததும் மக்கள் சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்றனர்.
தேமுதிக என்ற கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே சட்டசபையில் எதிர்கட்சி என்ற இடத்தில் அமர செய்தனர் தமிழக மக்கள்.துடிப்புடன் செயல்பட்ட கேப்டன் சினிமாவை போலவே அதிரடி காட்டத் தொடங்கினார். கூடவே சர்ச்சையிலும் சிக்கினார். செய்தியாளர்கள், அவமதிப்பு, அடிதடி என அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்க கட்சியின் பெயரும் அடிவாங்க தொடங்கியது.
இருந்த போது விஜயகாந்த் மீது மக்களுக்கு இருந்த மரியாதை குறையவில்லை. இந்நிலையில் தான் கேப்டன் உடலக்குறைவு காரணமாக கட்சி பணிகளில் இருந்து விலக தொடங்கினார். அவர் இடத்தை நிரப்ப அவரின் மனைவி பிரேமலதா கட்சி பணிகளை கவனிக்கத் தொடங்கினார். அதன்பின்பு ஏற்பட்ட சலசலப்பு காரணமாக தேமுதிக-வில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், விஜயகாந்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரி ஏலத்திற்கு விடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் அவருக்கு சொந்தமான வீடு மற்றும் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் கல்லூரி ஆகியவை ஏலத்தில் விட இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அண்ணா சாலை கிளை இன்றைய நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/06/sachin-45.jpg)
வரும் 26-ம் தேதி இந்த ஏலம் நடக்கும் என்றும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலவச திருமண மண்டபம், ஏழை எளிய மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் என பல நலத்திட்டங்களை மக்களுக்கு செய்த கேப்டனுக்கு இப்படி ஒரு நிலைமையா? என புலம்பி வருகின்றனர் தேமுதிக-வின் உண்மை விசுவாசிகள் மற்றும் கேப்டனுக்கு நெருக்கமானவர்கள்.
விஜயகாந்தின் 5.52 கோடி கடன் பாக்கிக்காக அவரின் அசையா சொத்துக்களை ஏலத்தில் விடுவதாக அந்த அறிவிப்பில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.