/indian-express-tamil/media/media_files/2JMlHjvDZv4zkVqNOUva.jpg)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்தப் புகாரில் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாக கூறினார். தொடர்ந்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு வந்தார். பின்னர் திடீரென அவரே வழக்கை வாபஸ் பெற்றார். தாம் கர்நாடகா செல்வதாகவும் கூறினார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் விஜயலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "12 வருடங்களாக இந்த வழக்கில் நியாயம் கிடைக்காமல் நான் போராடி கொண்டிருக்கிறேன். சீமான் விவகாரத்தில் ஆளும் கட்சியான தி.மு.க எனது புகாரை தீவிரமாக விசாரித்து நியாயம் வாங்கி தந்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. பெரியவர்கள், போலீசார்கள் உள்ளனர் அவர்களுக்கு தெரியும்.
இந்த மார்ச் மாதம் சீமான் மதுரை செல்வம் மூலம் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரது மனைவி கயல்விழிக்கு தெரியாமல் ரூ.50,000 பணம் கொடுக்க வந்தார். வீடியோ, போட்டோ ஆதாரங்களை வாங்கிவிட்டு மிரட்டினார். இதன் பின் மீண்டும் சென்னையில் புகார் அளித்தேன்.
2011-ல் என்னுடைய வழக்கை வைத்து சீமானை அ.இ.அ.தி.மு.க பாக்கெட்டில் போட்டுக் கொண்டது. வரக்கூடிய லோக்சபா தேர்தல் நேரத்தில் எனது வழக்கை எடுத்து சீமானை பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம் என யாராவது, எந்த அரசியல் கட்சியாவது பிளான் வைத்திருந்தால், நான் இப்போதே சொல்லி விடுகிறேன், நான் யாருக்கும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேன்.
இதே தமிழ்நாட்டில் சீமானுக்கு பயந்து, நான் வாழ்வதற்கு கூட வீடு கொடுக்காமல் செய்தார்கள். தூக்கி கர்நாடகாவில் போட்டார்கள். கர்நாடகா என்னைக் காப்பாற்றியது. எனது அம்மாவுக்கு இறுதிச் சடங்கு கூட செய்யவிடாமல் செய்தார்கள். கர்நாடகாவில் பிறந்த ஒரே காரணத்திற்காக, 12 வருடங்களாக எனக்கு நியாயம் தேடித் தராமல் அலைக்கழிக்கிறார்கள். இதற்கு நான் முடிவு கட்டுவேன்.
12 வருடங்களாக என்னிடம் தமிழ்நாடு போலீசார் ஆதாரங்களை வாங்கிக்கொண்டு நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள், என் போனையும் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் எனக் கூறி கர்நாடகா நீதிமன்றத்தில் வழக்கை போடுவேன். அன்றைக்குத்தான் சீமான் - விஜயலட்சுமி இடையேயான போரில் ஒரு நியாயம் கிடைக்கும். யாரிடமும் இனி தமிழ்நாட்டில் கெஞ்ச மாட்டேன். நான் இதை விடவே மாட்டேன்" என ஆவேசமாகப் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.