காங்கிரஸ் கட்சியின் பிரபலங்களில் ஒருவராகவும், தெலங்கானா மாநில காங்கிரஸ் பிரச்சாரக் குழுத்தலைவராகவும் இருப்பவர் நடிகை விஜயசாந்தி. இவர் தனியார் வார இதழுக்கு சமீபத்தில் அளித்தப் பேட்டியில், 'தமிழக அரசியலில் நான் இப்போது இருக்க வேண்டிய இடத்தில் ஓ.பன்னீர் செல்வம் இருக்கிறார்' என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "ஒருமுறை போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா அம்மாவை சந்தித்தேன். இரண்டு காலிலும் கட்டை விரல்களின் நகங்கள் நீக்கப்பட்டு புண்ணாக இருப்பதால் பேண்டேஜ் சுற்றப்பட்டிருப்பதாக அம்மா கூறினார். சர்க்கரை பாதிப்பு, ரத்த அழுத்தம், மூச்சிரைப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் அப்போதே அவர் சிரமப்பட்டார். நான் ஆறுதல் சொல்லி நம்பிக்கையாகப் பேசினேன். அப்போது நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்தது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வுக்குப் பிரசாரம் செய்ய ஜெயலலிதா என்னை அழைத்தார். தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்தேன். பிறகு ஆந்திர அரசியலில் கவனம் செலுத்தியதால், தமிழ்நாட்டு அரசியலில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனாலும், அரசியல் பிரச்னைகள் முதல் தன் உடல்நிலை பாதிப்புகள் வரை ஜெயலலிதா அம்மா என்னிடம் மனம்விட்டுப் பேசுவார்.
சொத்துக்குவிப்பு வழக்குப் பிரச்னையால், அவர் பதவியை இழந்த நேரம். 'ஆட்சி நிர்வாகத்தை வழிநடத்த நம்பிக்கையான ஒருவரை எதிர்பார்க்கிறேன். அ.தி.மு.க-வில் இணைந்து பணியாற்றுங்கள்’ என எனக்கு அழைப்பு விடுத்தார். 'தெலங்கானாவுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன். இந்நிலையில் நான் தமிழக அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது' எனச் சொன்னேன். அதைக் கனிவுடன் ஏற்றுக்கொண்டார். அதன் பிறகே, ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். நான் இருக்க வேண்டிய இடத்தில்தான், ஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.
தற்போது தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா அம்மாவின் ஆட்சியில்லை. மோடியின் மறைமுக ஆட்சி. நன்றாக இருக்கும் கட்சிகளில் பிளவு ஏற்படுத்துவதே அவர் வேலை. அதைத்தான் இந்தியா முழுக்கச் செய்து கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு, அ.தி.மு.க-வைக் கட்டுப்பாட்டுடன் வளர்த்தவர் ஜெயலலிதா. அவர் பட்ட கஷ்டங்களை அருகிலிருந்து பார்த்த முறையில், அக்கட்சியின் வளர்ச்சிக்குப் பணியாற்றிய உரிமையில், தற்போதைய அ.தி.மு.க ஆட்சி மற்றும் கட்சி நிர்வாகம் இரண்டும் தவறான பாதையில் செல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்போது அ.தி.மு.க கட்டுப்பாடில்லாத கட்சியாக இருக்கிறது.” என்று பேசியிருக்கிறார்.