தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அவமரியாதை ஏற்படுத்தியதாக விஜயேந்திரர் மீது வழக்கு பதிய கோரிய மனுவில், தன்னையும் ஒரு வாதியாக சேர்க்க விஜயேந்திரர் தரப்பில் கோரிக்கை. விசாரணை அடுத்த வாரத்துக்கு உயர்நீதிமன்றம் தள்ளிவைப்பு.
ஜனவரி 23 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை எழுதிய புத்தகமான தமிழ் - சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர், காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காமல் விஜயேந்திரர் தியானத்தில் இருந்தது சர்ச்சையை கிளப்பியது.
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக விஜேயந்திரர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் துணை தலைவரும் வழக்கறிஞருமான எஸ்.துரைசாமி சென்னை எஸ்பிளானேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை விசாரணை செய்யவில்லை. எனவே, தான் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் விஜயேந்திரர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி துரைசாமி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் மனுவில், அனைத்து நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் தமிழ்தாய் வாழ்த்து பாடலை இசைக்க வேண்டும் என தமிழக அரசு 1979 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், விஜேயந்திரர் எழுந்து நிற்காமல் வேண்டுமென்றே அவமதித்துள்ளார். எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயேந்திரர் மீதான புகாரை எஸ்பேளனட் காவல்நிலையத்தில் இருந்து ராயப்பேட்டை காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விஜயேந்திரர் தரப்பில் தன்னையும் இந்த வழக்கில் சேர்க்கும்படி முறையீடு செய்யப்பட்டது.
இதை ஏற்று கொண்டு நீதிபதி வழக்கை ஒரு வாரத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.