'தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்'! - சங்கர மடம் விளக்கம்

தமிழ்த் தாய் பாடிய போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என காஞ்சி சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது

தமிழ்த் தாய் பாடிய போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என காஞ்சி சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தையும் மறைந்த பேராசிரியருமான எஸ்.ஹரிஹரன் எழுதிய, தமிழ் – சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நூலை வெளியிட, சமஸ்கிருத பாரதியின் தேசிய அமைப்பு பொது செயலாளர் தினேஷ் காமத் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசியர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காதது சர்ச்சையை உருவாக்கியது. ஆளுநர் உள்ளிட்ட விழாவில் கலந்துகொண்ட அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்த நிலையில், விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசிய கீதம் இசைக்கும் போதும் மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார்.

இதனால், தேசிய கீதத்துக்கு மரியாதையும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதையும் செய்ததாக விஜயேந்திரர் மீது சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து சங்கர மடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் தாய் பாடிய போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார். பொதுவாக கடவுள் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நின்றாலும் ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் உட்கார்ந்து கொண்டே தியானத்தில் இருப்பது வழக்கம். அதுபோல் தமிழ்த் தாய் வாழ்த்தின்போதும் கடவுள் வாழ்த்துக்கான நடைமுறையை விஜயேந்திரர் பின்பற்றியுள்ளதாக சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது.

×Close
×Close