விஜயேந்திரருக்கு எதிர்ப்பு வலுக்கிறது :  போலீஸ் நிலையத்தில் புகார்

விஜயேந்திரருக்கு, தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஆண்டாள் விவகாரத்தை விஞ்சுகிற விதமாக இது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

விஜயேந்திரருக்கு, தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் விவகாரத்தில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஆண்டாள் விவகாரத்தை விஞ்சுகிற விதமாக இது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

விஜயேந்திரர், காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி! சென்னை, ராயப்பேட்டையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிகரன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் விஜயேந்திரர் கலந்து கொண்டார். அந்த விழாவில் தேசிய கீதம் பாடுகையில் எழுந்து நின்று மரியாதை செய்த விஜயேந்திரர், தமிழ்த் தாய் வாழ்த்து பாடுகையில் உட்கார்ந்து இருந்தார். இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், ஹெச்.ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விஜயேந்திரரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை மன்னிப்பு கேட்க கோரிய ஹெச்.ராஜாவின் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. எனவே விஜயேந்திரரை இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்க ஹெச்.ராஜா வற்புறுத்துவாரா? என சமூக வலைதளங்களில் காரசாரமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜயேந்திரர் தரப்பில் இது தொடர்பாக வெளியிட்ட விளக்கத்தில், ‘தமிழ்த் தாய் வாழ்த்து பாடுகையில் உட்கார்ந்த நிலையில் தியானம் செய்வதுதான் சங்கரமட மடாதிபதிகளின் மரபு. அதைத்தான் விஜயேந்திரர் செய்தார்’ என கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் உணர்வாளர்கள் இதை ஏற்கவில்லை.

தமிழ்த் தாய் வாழ்த்து பாடுகையில் எழுந்து நின்று உரிய மரியாதை செய்ய வேண்டும் என அரசாணையே இருக்கிறது. அந்த அடிப்படையில் சட்டத்தை மீறியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுக்கின்றன.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இது தொடர்பாக வெளியிட்ட கண்டன அறிக்கை வருமாறு : ‘நேற்று (23.1.2018) சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூனியர் காஞ்சி சங்கராச்சாரியாரான விஜயேந்திரர், ஆளுநர் மற்ற சிலரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நேரத்தில் எழுந்து நிற்காமல், இறுதியில் தேசியகீதம் என்ற ஜன கன மண பாட்டுப் பாடப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றுள்ளார் என்ற செய்தி வந்துள்ளது!

ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து திரிந்து, பிறழ் சாட்சிகள் 83 பேர்களின் தயவால் கொலைக் குற்றத்திலிருந்து, புதுவை செஷன்ஸ் கோர்ட்டில் விடுதலை பெற்று, மேல்முறையீடு செய்யாது தப்பித்துக் கொண்டதால், வெளியில் நடமாடும் இவர், அந்த சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தின்போது அதுவும் ஆளுநர் போன்றவர்கள் எழுந்து நின்ற நிலையில்கூட, எழுந்து நிற்க மறுத்து, அடாவடித்தனமாக அப்படியே அமர்ந்திருப்பது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

தமிழ் நீஷ பாஷை – சமஸ்கிருதம் தேவ பாஷை என்று கருதும் – கூறும் புத்திதானே இதற்கு மூலகாரணம்? தள்ளாத வயதில்கூட, கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளில், கடவுள் வாழ்த்து பாடப்பட்ட நேரத்திலும், நாட்டுப் பண் இசைக்கப்பட்டபோதும் எழுந்து நின்று அவை நாகரிகத்தினைப் பேணிக் காப்பாற்றிய வரலாறு நாடறிந்த ஒன்று அல்லவா!

இன்னமும் மொழியிலும் உயர்வு- தாழ்வு மனப்பான்மை, பேதத்தன்மை, சிலரிடம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும். தமிழ்நாட்டிலிருந்து கொண்டு, தமிழர்களிடம் காணிக்கை கணிசமாகப் பெற்றுக்கொண்டு பிழைக்கும் மடாதிபதியின் தமிழ் அவமதிப்பை – தமிழர்கள் புரிந்துகொள்வார்களா – அம்மேடையில் அமர்ந்திருந்த பட்டிமன்றப் புலவர் சாலமன் பாப்பையா உள்பட? தமிழர்களே அடையாளம் காண்பீர்! சங்கர மடம் இதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்!’. இவ்வாறு கி.வீரமணி கூறியிருக்கிறார்.

அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் இது குறித்து கூறியதாவது : ‘எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பது தவறானது’ என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்ததாக விஜயேந்திரர் மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயேந்திரர் மீது நடவடிக்கை எடுக்க இந்து அமைப்பைச் சேர்ந்த ராமபூபதி மனு அளித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ராமபூபதி புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close