விஜயேந்திரரை கண்டித்து போராட்டம் : சங்கர மடம் முற்றுகை, போலீஸாருடன் மோதல்

விஜயேந்திரரை கண்டித்து, காஞ்சிபுரம் சங்கர மடம் முன்பு பெரியார் திராவிடர் கழகத்தினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

விஜயேந்திரரை கண்டித்து, காஞ்சிபுரம் சங்கர மடம் முன்பு பெரியார் திராவிடர் கழகத்தினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

விஜயேந்திரர், காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி! இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிகரன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் விஜயேந்திரர் கலந்து கொண்டார். அந்த விழாவில் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

விஜயேந்திரர், மேடைக்கு வந்த நிமிடம் முதல் கண்களை மூடி தியானத்தில் இருந்தார். விழா தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் எழுந்து நின்றனர். ஆனால் விஜயேந்திரர் அதே தியானக் கோலத்தில் இருந்தார்.

ஆனால் நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். தமிழ்த் தாய் வாழ்த்து இசைத்தபோது அவர் எழுந்து நிற்காதது, தமிழ்த் தாயை அவமதித்தது போன்ற செயல் என தமிழ் உணர்வாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு சங்கர மடம் அளித்த விளக்கத்தில், ‘தமிழ்த் தாய் வாழ்த்து உள்ளிட்ட கடவுள் வாழ்த்துகளை பாடும்போது சங்கர மட பீடாதிபதிகள் தியானத்தில் இருப்பதுதான் வழக்கம்’ என கூறப்பட்டது. இதை ஏற்காமல் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் குதித்து வருகின்றன.

காஞ்சீபுரம் சாலைத் தெருவில் உள்ள காஞ்சி சங்கரமடத்தை விடுதலை சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம், மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று முற்றுகையிட்டனர். அவர்கள் விஜயேந்திரருக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பியபடி மடத்துக்கு செல்ல முயன்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டி.எஸ்.பி. முகிலன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. இதையடுத்து போராட்டக்காரர்கள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் அருகே காஞ்சி சங்கர மடத்துக்கு சொந்தமான மடம் உள்ளது. இங்கு இன்று காலை தமிழர் தேசிய முன்னணியை சேர்ந்த இளங்கோ தலைமையில் 11 பேர் விஜயேந்திரரை கண்டித்து கோ‌ஷமிட்டவாறு உள்ளே நுழைந்தனர். அவர்கள் மடத்திற்குள் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ‘தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரரை கைது செய்ய வேண்டும். அவர் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

அப்போது அங்கு வந்த மடத்தின் மேலாளர் சுந்தர வாத்தியார், பா.ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் முரளிதரன் ஆகியோர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் கோவில் போலீசார் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு முன்பு இன்று காலை தமிழ் மாணவர் அமைப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்கள் விஜயேந்திர சுவாமிகளின் உருவ படத்தை எரித்தனர். விஜயேந்திரருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதேபோல தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close