/indian-express-tamil/media/media_files/2025/09/21/durai-vaiko-2025-09-21-20-46-41.jpg)
'ஆதாரமில்லாத விமர்சனங்கள் விஜய்க்கு நல்லதல்ல'... திருச்சியில் துரை. வைகோ பேட்டி
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை. வைகோ, நடிகர் விஜய் திமுக மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் அவரது நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குவதாகக் கூறியுள்ளார். அவர் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்றும், ஆனால் ஆதாரமில்லாமல் விமர்சிப்பது சரியல்ல என்றும் தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு விஷயங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட வளர்ச்சிப் பணிகள்:
ரயில்வே மேம்பாலம்: திருச்சியில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்படவில்லை. எனவே, அதனை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
சாலை விரிவாக்கம்: பால்பண்ணை - துவாக்குடி சாலையை விரிவுபடுத்தும் பணியை விரைவுபடுத்த, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்துப் பேசியுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகமும் இதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
விமான நிலைய விரிவாக்கம்: திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இண்டிகோ விமானம் மூலம் மேலும் சேவைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துவிட்டன என்றும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க விமான நிலைய மேலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளதாகவும் கூறினார்.
நடிகர் விஜய் பற்றிய கருத்துக்கள்:
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்றும், படித்தவரான அவருக்குப் பின்னால் இளைஞர் பட்டாளம் இருப்பதாகவும் துரை. வைகோ தெரிவித்தார். எதிர்க்கட்சியாகச் செயல்பட நினைக்கும் விஜய், ஆதாரமில்லாமல் பொத்தாம் பொதுவாக அனைவரையும் குற்றம் சாட்டுவது அவரது நம்பகத்தன்மையை குறைக்கும் என்று கூறினார்.
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விஜய் பேசியது ஏற்புடையது அல்ல என்று துரை. வைகோ குறிப்பிட்டார். முதலீடு செய்ய உள்ள நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்த தரவுகளை முதலமைச்சர் வெளியிட்ட பிறகும் விஜய் இவ்வாறு பேசுவது அவரது தகுதிக்கு நல்லதல்ல என்று கூறினார்.
திமுக, பாஜக என இரு அரசுகளையும் விமர்சிக்க விஜய்க்கு முழு சுதந்திரம் உண்டு என்றும், அதேநேரத்தில், குறைகளைச் சுட்டிக்காட்டலாம், ஆனால் தரவுகள் இல்லாமல் விமர்சிப்பது பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்கும் என்றும் தெரிவித்தார். ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை குறித்த விஜய்யின் கருத்துக்கள் ஏற்புடையவை என்றும் அவர் கூறினார்.
கூட்டணிகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள்:
மல்லை சத்யா தனிக்கட்சி: மல்லை சத்யா தனிக்கட்சி தொடங்கியுள்ள விவகாரத்தைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, நாட்டில் இன்னும் பல முக்கியமான பிரச்னைகள் உள்ளன என்றும் அதைப் பற்றி பேசுமாறு துரை. வைகோ பதிலளித்தார்.
அதிமுக - பாஜக கூட்டணி: அதிமுக - பாஜக கூட்டணி திடீரென சேர்வதும், பலர் திடீரென கூட்டணியில் இருந்து வெளியேறுவதும் குறித்து கருத்து தெரிவித்த அவர், அதிமுகவின் தொண்டர்கள் முழு மனதுடன் இந்தக் கூட்டணியை ஆதரிக்கவில்லை எனத் தான் சந்தேகிப்பதாகவும், இந்தக் கூட்டணி இன்று இருக்குமா, நாளை இருக்குமா என தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் கூறினார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது மதிமுக மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு மற்றும் டிடிசி சேரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.