scorecardresearch

எஸ்.ஏ.சி கட்சியில் இருந்து விலகி விட்டேன்: விஜய் தாயார் ஷோபா

விஜயின் தாயார் ஷோபா, எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் இருந்து நான் விலகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

vijay, vijay mother shoba, shoba left from sa chandrasekar's political party, விஜய், விஜய் அரசியல் கட்சி, எஸ் ஏ சந்திரசேகர் அரசியல் கட்சி, விஜய் தாயார் ஷோபா, ஷோபா பேட்டி கட்சியில் இருந்து விலகிவிட்டேன், sa chandrasekar, vijay mother shoba interview, sac political party

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்ததாக செய்தி வெளியான உடனே நடிகர் விஜய் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் கட்சியில் இருந்து விலகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி பதிவு செய்திருப்பதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தி வெளியான அடுத்த நில நிமிடங்களிலேயே, நடிகர் விஜய், என் தந்தை ஆரம்பித்துள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த தொடர்பும் இல்லை. கட்சியில் எனது பெயரையோ, படத்தையோ பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார். இதனால், ஊடகங்கள் மேலும் பரபரப்பானது.

எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பித்திருந்த படிவத்தில், கட்சியின் தலைவராக பத்மநாதனும் பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளராக விஜயின் தாய் ஷோபா சந்திரசேகரின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து ஊடகங்கள் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்புகொண்டு விசாரித்தபோது, விஜய் ரசிகர்களுக்கெல்லாம் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் வகையில்தான் கட்சி ஆரம்பிக்கப்பட்டது என்று கூறினார்.

இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், எனக்கும் விஜய்க்கும் சுமூகமான உறவு இல்லை என்று சிலர் கற்பனையாக கூறுவதற்கு நான் விளக்கம் தர முடியாது என்று கூறினார்.

இந்த நிலையில் தந்தி டி.வி-க்கு பேட்டி அளித்த விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர், “எனக்கு வந்து ஒரு மாதத்துக்கு முன்னாடி, எஸ்.ஏ.சி என்னிடம் வந்து ஒரு சங்கம் ஒன்று ஆரம்பிக்கிறேன். அதற்கு கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டார்கள். சரி நல்ல விஷயம்தானே என்று நானும் கையெழுத்துப் போட்டேன். அப்புறம், இப்போ ஒரு வாரத்துக்கு முன்னாடி, மீண்டும் இன்னொரு கையெழுத்து வேண்டும் என்று கேட்டார்கள். அதன்பிறகு பார்த்தால், அது கட்சி பதிவு செய்வதற்கு என்பதை நான் புரிந்துகொண்டேன். அதனால், நீங்கள் விஜய்க்கு தெரியாமல் செய்வதால் நான் கையெழுத்து போடமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். முதலில் நான் போட்டை கையெழுத்தையும் வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்.” என்று கூறினார்.

கட்சியினுடைய பொருளாளராக உங்களுடைய பெயர் இடம்பெற்றுள்ளது. அப்போது, உங்களுடைய ஒப்புதல் இல்லாமல்தான் உங்களுடைய பெயர் இடம் பெற்றதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஷோபா, “முதலில் அது அசோசியேஷன் என்று சொன்னதால் நான் கையெழுத்து போட்டுவிட்டேன். அப்புறம்தான் தெரியும் அது பொருளாளருடைய கையெழுத்து என்று தெரியும். அதன் பிறகு, நானும் அவரிடம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவரும் சரி என்று சொல்லிவிட்டு நான் வேறு யார் பெயரையாவது போட்டுக்கொள்கிறேன் என்று எஸ்.ஏ.சி-யும் சொல்லிவிட்டார்.

இதுபோல அரசியல் தொடர்பாக ஊடகங்களில் பேச வேண்டாம் என்று விஜய் பலமுறை சொல்லிக்கொண்டிருந்தாலும் அவர் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார். அதனால், இப்போது விஜய் அவரிடம் பேசுவதில்லை.” என்று கூறினார்.

உங்களுடைய ஒப்புதல் இல்லாமல் கட்சியாக பதிவு செய்திருக்கிறார்கள் அடுத்ததாக உங்களுடைய நடவடிக்கை என்ன கேள்விக்கு பதிலளித்த ஷோபா, “நான் ஒன்றும் செய்யப்போவதில்லை. எனது கையெழுத்து வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.” என்று கூறினார்.

மேலும், விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர் வருங்காலத்தில் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, இது குறித்து நீங்கள் விஜயிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.

அதோடு, எஸ்.ஏ.சி தொடங்கிய கட்சியில் இருந்து நான் விலகிவிட்டேன் என்று விஜயின் தாயார் ஷோபா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Vijays mother shoba says i left from sa chandrasekar political party