செப்.13-ல் பிரசாரத்தை தொடங்கும் விஜய்: திருச்சியில் இடம் இழுத்தடிப்பு; ஓட்டலும் கிடைக்காத சோகம்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தனது அரசியல் சுற்றுப்பயணத்தை செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் தொடங்கவுள்ளார். இதற்காக, அவரது கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல் ஆணையரிடம் அனுமதி கோரி மனு அளித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தனது அரசியல் சுற்றுப்பயணத்தை செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் தொடங்கவுள்ளார். இதற்காக, அவரது கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல் ஆணையரிடம் அனுமதி கோரி மனு அளித்தார்.

author-image
WebDesk
New Update
Trichy Police Deny Permission for Vijay's Roadshow.

செப்.13-ல் பிரசாரத்தை தொடங்கும் விஜய்: திருச்சியில் இடம் இழுத்தடிப்பு; ஓட்டலும் கிடைக்காத சோகம்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தனது அரசியல் சுற்றுப்பயணத்தை வரும் செப்.13-ம் தேதி திருச்சியில் தொடங்கவுள்ளார். இதற்காக, அவரது கட்சி சார்பில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. அப்போது, காவல்துறைக்கும், கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisment

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை கடந்த ஆண்டு 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றினார். தொடர்ந்து, முதல் 2 மாநாடுகள் விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் வெற்றிகரமாக நடைபெற்றன. அடுத்த சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக, சென்டிமென்டாக முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி மாநகரில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்க முடிவு செய்தார். இதற்காக, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று திருச்சிக்கு வந்து, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புக்குப் பின் காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றார்.

காவல்துறையின் மறுப்பு

காவல் ஆணையர் காமினியை நேரில் சந்தித்த புஸ்ஸி ஆனந்த், மரக்கடை, காந்தி மார்க்கெட், பால்பண்ணை, சென்னை புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரோடு ஷோ நடத்த அனுமதி கோரி மனு அளித்தார். ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக ரோடு ஷோவுக்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டது. அதற்கு, திருச்சி மாநகரத்தில் 45 இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதி உண்டு என்றும், அதில் சத்திரம் பேருந்து நிலையம் இல்லை எனவும் காவல்துறை தெரிவித்தனர். பின்னர், மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை, சிந்தாமணி அண்ணா சிலை, மற்றும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போன்ற இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு தவெகவினர் மனு அளித்துள்ளனர்.

திட்டத்தில் மாற்றம்

Advertisment
Advertisements

விஜய் 2 நாட்கள் திருச்சியில் தங்கி, ஒரு மாவட்டத்திற்கு 2 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சியில் உள்ள பிரபல ஹோட்டல்கள் அவருக்கு அறைகள் ஒதுக்க மறுத்துவிட்டதால், பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விஜய் சென்னையில் இருந்து அதிகாலையில் புறப்பட்டு, திருச்சிக்கு வந்து பிரச்சாரத்தை முடித்துவிட்டு அன்றிரவே சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது.

செப்டம்பர் 13-ம் தேதி காலை 10.35 மணிக்கு திருச்சி வரும் விஜய், மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அல்லது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள குன்னம் ஆகிய தொகுதிகளில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதே பாணியில், ஒருநாள் விட்டு ஒருநாள் என மொத்தம் 100 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல் ஆணையர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு

பிரச்சார அனுமதி கோரி புஸ்ஸி ஆனந்த் காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றபோது, அவருடன் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது, ஒருசிலர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்டச் செயலாளர் குடமுருட்டி கரிகாலன் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் சென்று அனுமதி கோரி கடிதம் அளித்தார். இறுதியாக, விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள இடங்களை புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

TVK

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: