கருணாநிதி இறுதிப் பயணம்: முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.
இதைத் தொடர்ந்து, அவரது உடல் குடும்பத்தினர் அஞ்சலிக்காக கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டது. அதன்பின், சிஐடி காலனி வீட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்ட கருணாநிதி உடல், அதிகாலை முதல் பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு, பின்னர் மெரினாவில் அடக்கம் செய்ய கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்டஎண்ணற்ற திரை பிரபலங்கள், ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆனால், விஜய் வரவில்லை. பதிலாக, அவரது மனைவி சங்கீதாவும், விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரும், கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த வாரம், காவேரி மருத்துவமனியில் கருணாநிதி சிகிச்சை பெற்றபோது, ஸ்டாலினை நேரடியாக சந்தித்து விஜய் நலம் விசாரித்து இருந்தார். ஆனால், ஏன், விஜய் ராஜாஜி அரங்கத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தவில்லை? என கேள்வி எழுந்தது.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் அந்த ஷூட்டிங்கிற்காக அமெரிக்காவில் இருப்பதால், அவரால் வர முடியவில்லை என்று தெரியவந்தது.
தவிர, கருணாநிதியின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுவதை முன்னிட்டு, அதற்கு மரியாதை அளிக்கும் விதமாக, இன்றைய ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் படக்குழு ரத்து செய்துள்ளதாம்.