அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டது குறித்து பிரதமர் மோடி பேசாமல் இருந்ததை விமர்சித்து கடந்த 10 ஆம் தேதி விகடன் பிளஸ் இணைய இதழில் கருத்துச் சித்திரம் வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விகடன் நிறுவனத்தின் மீது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசிடம் புகார் அளித்திருந்த நிலையில் நேற்று பல இடங்களில் விகடன் இணையதளம் இயங்கவில்லை என அந்நிறுவனத்துக்கு வாசகர்களிடம் இருந்து புகார்கள் சென்றன.
இதற்கு விகடன் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது, "தங்கள் தளத்தை முடக்கியதாக மத்திய அரசிடம் இருந்து முறையான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குவோம்" என்றும் தெரிவித்து இருந்தது.
மேலும், அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால் அதையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் விகடன் நிறுவனம் தெரிவித்தது. இதனிடையே, கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த சென்னை பத்திரிகையாளர் மன்றம், கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க விகடனுடன் நிற்போம் என உறுதி அளித்துள்ளது.
கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் இந்த நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிப்பதாகவும் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க விகடன் நிறுவனத்துடன் என்றும் நிற்பதாகவும் உறுதியளித்து இருந்தது.
இந்நிலையில், நேற்று(பிப்ரவரி 16) நடந்த மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றுப் பேசிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள், விகடன் மீது மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்ததா என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த எல்.முருகன், “சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்காதது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “மத்திய அரசு வழங்கக்கூடிய திட்டம் வேண்டாம்; நிதி மட்டும் வேண்டுமா? விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாமல் நிதிமட்டும் கேட்பது எப்படி? விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் அனைத்து ஆதரவையும் மத்திய அரசு அளிக்கத் தயார் என்றே மத்திய கல்வித்துறை அமைச்சர் கூறியதாகவும் தெரிவித்தார்.