Vikravandi assembly constituency by-election AIADMK Vs DMK: தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 2 தொகுதிகளையும் கைப்பற்றிவிட வேண்டும் என ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சிகளான திமுக – காங்கிரஸ் கூட்டணியும் தீவிர முனைப்பில் உள்ளன.
விக்கிரவாண்டி தொகுதியில் 2016 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற திமுகவைச் ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானதால் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மறைந்த ராதாமணி விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவின் முக்கிய தலைவர் பொன்முடியின் ஆதரவாளர் என்பதால் அவருடைய பரிந்துரையில் அப்போது அவருக்கு சீட் தரப்பட்டது. அவருடைய மறைவுக்குப் பிறகு, மீண்டும் பொன்முடி பரிந்துரை செய்பவருக்கே சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, திமுக தலைமைக் கழகம் நடத்திய விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளருக்கான நேர்காணலில் பொன்முடியின் ஆதரவாளர் நா.புகழேந்தி தேர்வு செய்யப்பட்டு விக்கிரவாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
வேட்பாளர் நா.புகழேந்தி திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக உள்ளார். இவர் 1986 ஆம் ஆண்டு அத்தியூர் திரிவாதி ஊராட்சி மன்ற தலைவராகவும், 1996 ஆம் ஆண்டு கோலியனூர் ஒன்றிய பெருந்தலைவராகவும் பதவி வகித்தவர். அதோடு திமுகவில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். நா.புகழெந்தியின் சொந்த ஊர் சொந்த ஊர் பிடாகம். அதனால், இவர் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் பொன்முடியின் பரிந்துரையில்தான் சீட் வழங்கப்பட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புகழேந்தியும் மறைந்த ராதாமணியும்தான் விழுப்புரத்தில் க.பொன்முடியின் அரசியல் செல்வாக்கு உயர்ந்ததில் பெரிய ஆதரவாளர்களாக இருந்தனர். ராதாமணி காலமானதால், பொன்முடி தனது ஆதரவாளரான நா.புகழேந்தியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருப்பதாகக் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் பணி பொறுப்புக்குழுவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணி பொறுப்புக்குழு தலைவராக க.பொன்முடி அறிவிக்கப்பட்டுள்ளார். குழு செயலாளராக எம்.பி. ஜெகத்ரட்சகனும் குறு உறுப்பினர்களாக செஞ்சி எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தான், அங்கையற்கண்ணி, டி.எம்.செல்வகணபதி, ஏ.கே.எஸ்.விஜயன், பூந்தமல்லி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அது மட்டுமில்லாமல் திமுக தலைமைக் கழகம் மூத்த தலைவர்களை தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் தேர்தல் பணிப் பொறுப்பாளர்களாக அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி மேற்கூ ஒன்றியத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும், கானை வடக்கு ஒன்றியத்துக்கு முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலுவும் விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்துக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், கானை தெற்கு ஒன்றியத்திற்கு தா.மோ.அன்பரசனும் கோலியனூர் மேற்கு ஒன்றியம் மற்றும் விக்கிரவாண்டி பேரூருக்கு எம்.பி. ஆ.ராசாவும் தேர்தல் பணிப் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இப்படி திமுக மூத்த தலைவர்களின் தலைமையில் வலிமையான வியூகங்களுன் விக்கிரவாண்டி தொகுதி தேர்தலை சந்திக்க தயாராகி உள்ளது.
அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதிக்கு முத்தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முத்தமிழ்ச்செல்வன் அதிமுகவில் விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியச் செயலாளராக உள்ளார். இதற்கு முன்பு இவர் 1985 முதல் 1991 வரை கல்பட்டு ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார்.
விக்கிரவாண்டி தேர்தலில் திமுக மூத்த அமைச்சர்கள் எம்.எல்.ஏ-க்களை களம் இறக்கி வியூகம் அமைத்துள்ளது என்றால், அதிமுக அதற்கு மாறாக 16 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதிக்கு அதிமுக சார்பில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தருமபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், கோவை மாநகர், கோவை புறநகர், நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் விக்கிரவாண்டி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமித்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் தெரிவித்துள்ளனர்.
அதிமுக தலைமையின் இந்த அறிவிப்பு அதிமுகவினரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அறிவிப்பிலேயே இந்த இடைத்தேர்தல் அரசியல் அனல் பறக்கும் என்பதை காட்டுகின்றன.