Advertisment

'வீணர்களை விரட்டியடித்த விக்கிரவாண்டி மக்கள்': ஸ்டாலின் பெருமிதம்

"பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்." முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vikravandi

தமிழ்நாட்டில் 2019 முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார்.

தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

Advertisment

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மகத்தான - மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நாற்பது தொகுதியிலும் நாற்பதுக்கு நாற்பது என்ற நூறு விழுக்காடு வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி பெற்றது. சாதாரண வெற்றியல்ல, பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியைப் பெற்றோம்.

அ.தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடைந்தது. பா.ஜ.க கூட்டணி, பாதாளத்தில் விழுந்தது. இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொண்டோம். விக்கிரவாண்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய புகழேந்தி அவர்கள் உடல்நிலை காரணமாக மறைவெய்தியதைத் தொடர்ந்து இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்தோம். நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வியில் எழ முடியாமல் இருந்த அ.தி.மு.க, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதே படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது. பா.ஜ.க, தனது அணியில் இருக்கும் பா.ம.க.வை நிறுத்தியது. 'இடைத்தேர்தலிலேயே நிற்பது இல்லை' என்று வைராக்கியமாக இருந்த பா.ம.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை.

தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பா.ஜ.க. அணி. அவதூறுகளையும், பொய்களையும் தி.மு.க மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 விழுக்காடு தோல்வியை மறைப்பதற்காக மிகக் கீழ்த்தரமான பரப்புரையை பா.ஜ.க. அணி செய்தது. பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகமே என்றும் எப்போதும் தேவை என்பதை இந்த இடைத்தேர்தலின் மூலமாக எடைபோட்டுச் சொன்ன விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேரகாலம் பார்க்காமல் உழைத்த உழைப்புக்கும், தினந்தோறும் உருவாக்கிக் கொடுத்த திட்டங்களுக்கும் மக்கள் தெரிவித்த நன்றியின் அடையாளமாகவே இந்த வெற்றியை நான் பார்க்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெற வைக்க பொறுப்பேற்றுக் கொண்ட கழக துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் க.பொன்முடி - கழக கொள்கைப் பரப்பு செயலாளரும் - நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் களம் கண்டார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் என பலரும் களப்பணி ஆற்றினார்கள். பொதுச்செயலாளர் துரைமுருகன், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி உள்ளிட்ட முன்னணியினர் பலரும் தேர்தல் பரப்புரை செய்தார்கள். நமது இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார்கள்.

இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் - உடன்பிறப்புகளும் - தோழமைக் கட்சித் தோழர்களும், உதயசூரியனின் வெற்றிக்கு இரவு பகல் பாராது - கண்துஞ்சாது உழைத்த அனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும். விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொன் கௌதமசிகாமணி உள்ளிட்ட ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேநேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பா.ஜ.க தோல்வியைத் தழுவி இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறாத கட்சி தான் பா.ஜ.க. இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது பா.ஜ.க. அத்தகைய தோல்வி முகமே பா.ஜ.க-வுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது.

தோல்விகளில் இருந்து பா.ஜ.க பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பா.ஜ.க. இனியாவது உணர வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019ம் ஆண்டு முதல் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது.

தி.மு.க கழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது. இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் நமது கழக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது.

நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும் - வெற்றிப் பயணத்தையும் தொடர்கிறோம். மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். 

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Dmk Vikravandi Cm Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment