பாபு ராஜேந்திரன் - விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024 முன்னிட்டு, 276 வாக்குச்சாவடி மையங்களில் 10 தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நாளை (ஜூலை.13) விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 08.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. முதலாவதாக, அஞ்சல் வாக்கு எண்ணும் பணியும் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெறவுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை 14 மேசைகளில் 20 சுற்றுக்களாக நடைபெறவுள்ளது.
இதில் மேசை ஒன்றிற்கு 1 மேற்பார்வையாளர், 1 உதவியாளர் மற்றும் 1 நுண்பார்வையாளரும், அஞ்சல் வாக்கு எண்ணிக்கை 02 மேசைகளில் நடைபெறவுள்ளது. இதில் மேசை ஒன்றிற்கு 1 மேற்பார்வையாளர், 1 உதவியாளர் மற்றும் 1 நுண்பார்வையாளரும், பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் பகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிக்கு 14 கிராம உதவியாளர்கள், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், இதர பணியாளர்கள் என மொத்தம் 150 நபர்கள் வாக்கு எண்ணிக்கை பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பு பணிகளில் 1195 காவலர்களும், 24 மத்திய துணை காவல் படையினர்களும் ஈடுபடவுள்ளனர். அத்துடன் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“