விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21-ம் தேதி ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 -ம் தேதி கடைசி நாள் ஆகும்.
அன்று தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு ஜூலை 10 -ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போதிலிருந்து தொகுதி சார்ந்த விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் விக்கிரவாண்டி உட்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“