விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜூன் 14) தொடங்குகிறது. வரும் 21-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24-ம் தேதி நடைபெறும்.
மனுக்களை திரும்ப பெற வரும் 26-ம் தேதி கடைசி நாளாகும். அன்று வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
ஜூலை10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, வட்ட வழங்கல்அலுவலர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக வேட்பாளராக மாநில விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தேர்தல் பணிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தெரிகிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவெடுத்த பின்னர், அறிவிக்கப்படும், என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“