பாபு ராஜேந்திரன் விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதியுடன் நிறைவுற்றது.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த 64 பேர் வேட்பு மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசினை முன்தினம் விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில், முக்கிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களான திமுக அன்னியூர் சிவா, பாமக சி அன்புமணி, நாம் தமிழர் கட்சி டாக்டர் அபிநயா, ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
மொத்த மனுவாக பெறப்பட்ட வேட்பு மனுக்களின் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்ப மனுக்களை திரும்ப பெறுவதற்கு 26 ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை 3 மணி வரை வாபஸ் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. மாலை 3 மணி வரை யாரும் வேட்பு மனுவை வாபஸ் பெறாததால் அதைத்தொடர்ந்து 29 வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர், வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியின் சின்னமும், பா.ம.க வேட்பாளர் அன்புமணிக்கு மாம்பழச்சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவிற்கு மைக் சின்னமும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என ஒவ்வொரு பிரிவாக சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், சுயேட்சை வேட்பாளர் நான்கு பேர் பானை சின்னம் கேட்டு விண்ணப்பித்தனர். இதனையடுத்து, நான்கு வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் தேர்வு செய்யப்பட்டது. இதில் சிவசக்தி என்ற சுயேட்சை வேட்பாளருக்கு குலுக்கல் முறையில் பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. இதை அறிந்த, தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இன்று புதன்கிழமை 5 மணிக்கு வெளியிடப்பட வேண்டிய வேட்பாளர் பட்டியல், இரவு 9 மணி வரை வெளியிடப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பழனி தேர்தல் பொது பார்வையாளர் அமித் சிங் பன்சால், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சந்திரசேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவராஜ் ,உள்ளிட்ட அதிகாரிகள் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு விளக்கத்தை தெரிவித்தனர். இருப்பினும், தேர்தல் இணையதளத்தில் அனைத்தும் வெளியிடப்பட வேண்டி உள்ளதால், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. அதன்பின்னர், ஒரு வழியாக 29 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து, 13 ஆம் தேதி வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன என்பது குறிபிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“