சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாததால் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அ.தி.மு.க புறக்கணிக்கிறது என்று இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் திருமணவிழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ அ.தி.மு.க வலிமையோடு இருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க விடாமல் ஆடு, மாடுகளை போன்று அடைத்துச் சென்று வாக்களிக்க வைத்த காட்சியை நாம் பார்த்தோம். தேர்தல் ஆணையம் அதை கண்டுகொள்ளவில்லை.
தேர்தல் ஆணையம், காவல்துறை, அரசு அதிகாரிகள் மாநில அரசுக்கு துணைபுரிகிறார்கள். அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு, ஆட்சி அதிகாரம், பணபலத்தை பயன்படுத்தி, பரிசு பொருட்களை கொடுத்து ஈரோடு கிழக்கில் தேர்தல் நடந்தது. சுதந்திரமாக தேர்தல் நடக்காது என்பதால், இந்த தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடவில்லை.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி சட்டப்பேரவையில் அ.தி.மு.க, தி.மு.க கூட்டணியை விட 6 ஆயிரம் வாக்குகள்தான் குறைவு. மறுபடியும் போட்டியிட நினைத்தால் விடமாட்டார்கள். தி.மு.க 200 இடங்களில் வெல்லும் என்றும் ஸ்டாலின் பேசுகிறார். அவரின் கனவு பலிக்காது. தமிழக மக்களை பொறுத்தவரை, மாநிலத்தில் மற்றும் மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை பிரித்து பார்த்து தான் வாக்காளிக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.