விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீமதியின் தாயார் செல்வி, நான் பட்ட இன்னல்களையும் துன்பங்களையும் யாரும் படக்கூடாது என்றும் தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு வாக்காளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைந்துள்ளது. தேர்தலில் போட்டியிட ஸ்ரீமதியின் தாயார் உட்பட 64 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க-வின் புகழேந்தி, உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் ஜூன் 14 -ம் தேதி தொடங்கியது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளில் இருந்து சுயேச்சைகள் பலர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க இத்தேர்தலை புறக்கணித்த நிலையில், தி.மு.க, பா.ம.க, நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. மொத்தம் 64 பேர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜூன் 26-ம் தேதி கடைசி நாள். வாக்குப்பதிவு ஜூலை 10-ம் தேதி நடத்தப்பட்டு, தேர்தல் முடிவு ஜூலை 13-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த இடைத் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி போட்டியிடுகிறார். ஸ்ரீமதியின் தாயார் செல்வி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “கடந்த இரண்டு வருடங்களாக எத்தனை கொடுமைகளை அனுபவிக்கனுமோ அத்தனையும் அனுபவித்துள்ளேன். அந்த அனுபவமே இடைத்தேர்தலில் போட்டியிட வைத்துள்ளது. மக்களுக்கு சேவை செய்ய நினைத்தோம் என்றால் சாதாரண மக்களாக இருந்து யாருக்கும் சேவை செய்ய முடியாது.
என் முழு நோக்கமும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான். நான் பட்ட இன்னல்களையும் துன்பங்களையும் மக்கள் படக்கூடாது என்ற நோக்கத்தோடு போட்டியிடுகிறேன். மக்கள் பெரும் ஆதரவு கொடுத்து வாய்ப்பு அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“