விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த தி.மு.கவைச் சேர்ந்த புகழேந்தி கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனுத் தாக்கல் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இன்று பா.ம.க வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் பா.ம.க போட்டியிடுகிறது.
இது தொடர்பாக பா.ம.க வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஜூலை 10 ஆம் நாள் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுவார்.
விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸை இன்று (சனிக்கிழமை) தைலாபுரம் தோட்ட இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தி.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, நா.த.க சார்பில் டாக்டர் அபிநயா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“