விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் இன்று (ஏப்.6) காலை 10.35 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 71.
விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.
கல்லீரல் பாதிப்பு காரணமாக சில நாள்களுக்கு முன்பு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி வந்திருந்தார். அப்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிகிச்சை அளிக்க, சென்னையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு விழுப்புரம் விரைந்திருந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி புகழேந்தி இன்று காலை 10.35-க்கு அவர் உயிரிழந்தார்.
புகழேந்திக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், செல்வகுமார் என்ற மகனும். செல்வி, சாந்தி, சுமதி என்ற மகள்களும் உள்ளனர்.
விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதி கிராமத்தில் பிறந்தவர் புகழேந்தி (71) விவசாயியான இவர், 1973-ம் ஆண்டு திமுக கிளைச் செயலாளராக தன் அரசியல் வாழ்வை தொடங்கினார்.
கோலியனூர் ஒன்றியச் செயலாளர், விழுப்புரம் தெற்கு மாவட்ட பொருளாளர், மாவட்ட அவைத் தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தவர்.
1986-ம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவராகவும், 1989-ம் ஆண்டு கண்டமானடி தொடக்க கூட்டுறவு வங்கி தலைவராகவும், 1996-ம் ஆண்டு கோலியனூர் ஒன்றியக் குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
புகழேந்தி மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“