விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பழனிவேல்- சிவசங்கரி ஆகிய தம்பதியின் மூன்று வயது குழந்தை லியால் லட்சுமி எல்.கே.ஜி படித்து வந்தார். இந்தப் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைக்கு இரும்பால் மூடப்பட்ட கழிவுநீர் தொட்டி முழுவதுமாக சேதமடைந்து இருந்துள்ளது. அந்த சேதமடைந்த கழிவுநீர் பகுதியில், லியால் லட்சுமி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
சோகம்
கழிவுநீர் தொட்டி மீது லியா லட்சுமி விளையாடும் போது அந்த இரும்புத்தகடு முழுவதுமாக நொறுங்கி விழுந்துள்ளது . இதில், அந்த குழந்தை கழிவுநீர் தொட்டிக்குள் திடீரென்று விழுந்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்ட பள்ளி நிர்வாகிகள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், அந்த தொட்டிக்குள் விழுந்ததால் லியா லட்சுமி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பள்ளியின் ஓட்டுனர் இரும்பு கம்பியை வைத்து சிறுமி சடலத்தை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த குழந்தையின் உடலை அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மூன்று வயது குழந்தை, எப்படி வகுப்பறையை விட்டு வெளியே வந்தது? என்றும், பள்ளி கழிவுநீர் தொட்டி சரிவர மூடப்படவில்லையா? என்றும் கேள்விகளை முன் வைத்து பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பிரேதேப் பரிசோதனைக்காக சிறுமியின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில் தற்போது பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உடலானது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் உடலைப் பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நிவாரணம்
இதற்கிடையில், குழந்தையை பறிகொடுத்த குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்த நிலையில், குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் பொன்முடி ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை குழந்தையின் பெற்றோர்களிடம் வழங்கினார். ஆனால், முதலில் அதனை சிறுமியின் தாயார் ஏற்க மறுத்து, நிவாரணத்தை நிராகரித்தார். மேலும், அந்த குழந்தையை நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் பெற்றதாக கூறி, மகளின் இறப்பை தாங்கிக்கொள்ள இயலாமல் கதறித் துடித்தார். தொடர்ந்து, பலரும் அவருக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர்.
நீதிமன்ற காவல்
இந்த நிலையில், பள்ளிச் சிறுமி உயிரிழந்த வழக்கில் 3 பேரை ஜனவரி 10 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க விக்கிரவாண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமோனிக், ஆசிரியர் ஏஞ்சல்ஸ் ஆகியோரை 7 நாள் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.