vikravandi nanguneri by election : தமிழகத்தில் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. இடைத்தேர்தல் என்றால் சந்தேகமே வேண்டாம் ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும் என்ற பழைய வரலாற்றை மாற்ற திமுக பெரிய பெரிய திட்டங்களுடன் களத்தில் இருங்கியுள்ளது. ஒருபக்கம் அதிமுக வெற்றி என்பதே ஏற்கனவே உறுதியாகி விட்டது என நம்பிக்கையில் அடுத்தடுத்த மூவ்களை செய்து கொண்டிருக்கின்றனர்.
நடந்து முடிந்த மக்களவைப் பொதுத்தேர்தல் முடிவில் 22 தொகுதிகளை கைப்பற்றி கொடி நாட்டியது திமுக. அதே சமயம் 9 தொகுதிகள் எங்களிடம் என்பது போலவே வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்க வைத்தது எடப்பாடி அரசு. அதே போல் இறுதியாக நடந்து முடிந்த வேலூர் தொகுதியில் திமுக வின் வெற்றியும் விமர்சனத்தை சந்தித்திருந்தது. காரணம் மக்களவை தேர்தல் முடிவில் லட்சகணக்கில் ஓட்டு வித்யாசத்தில் முதலிடம் பிடித்திருந்த திமுக வேலூரில் வெறும் 8 ஆயிரத்து சொச்சம் வாக்குகளில் மட்டுமே வெற்றி பெற திமுக வேட்பாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். 8 மாதத்தில் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்தது ஸ்டாலினை சற்று கோபத்தில் ஆழ்த்தி இருந்தது.
இந்நிலையில் இப்போது இடைத்தேர்தலுக்கு திமுக - அதிமுக மும்முரமாக களத்தில் இறங்கி இருக்கின்றனர். இந்த முறை என்ன நடக்கும்? நாங்குனேரி- விக்கிரவாண்டி தொகுதியின் களநிலவரம் என்ன? என்பதை பார்க்கலாம் வாங்க.
விக்கிரவாண்டி தொகுதி:
தொகுதி சீரமைப்பின் மூலம் 2007ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதியில் 2011ஆம் ஆண்டில் சிபிஎம்மின் வேட்பாளர் ஆர். ராமமூர்த்தி வெற்றிபெற்றார். 2016ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் தி.மு.கவின் சார்பில் போட்டியிட்ட ஆர். ராதாமணி வெற்றிபெற்றார். இப்போது இந்த தொகுதியில் தி.மு.க சார்பில் விழுப்புரம் மாவட்டத் தி.மு.க பொருளாளர் புகழேந்தி களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். இவரின் சொந்தத் தொகுதி விக்கிரவாண்டி அல்ல. இந்த பகுதியில் இவருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து இவருக்கு கட்சி மேலிடம் சீட்டு ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது.
அ.தி.மு.க சார்பில் காணை ஒன்றியச் செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார். இவரது சொந்த தொகுதி விக்கிரவாண்டி. இவர்கள் ஏற்கனவே ஊராட்சி மன்றத் தேர்தல் வெற்றியை ருசி பார்த்தவர்கள். எடப்பாடியின் நீண்ட தேர்வுக்கு பின்னர் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். விக்கிரவாண்டியில் தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் பொன்முடி புகழேந்திக்கு மிகவும் நெருக்கம். திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்பு அதே ஊரை சேர்ந்தவரை தான் வேட்பாளராக இறக்க வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருந்த அமைச்சர் சி.வி.சண்முகம் முத்தமிழ்ச்செல்வனை பரிந்துரைத்துள்ளார்.
திமுக விக்கிரவாண்டியில் ஜெயித்து விட பல யூகங்களை வகுத்துள்ளது. ஆனால் அதே சமயம் அந்த தொகுதியை சேர்ந்த சில திமுக நிர்வாகிகள் பொன்முடி செயல் குறித்து சில அதிரூப்திகளையும் தெரிவித்துள்ளனர். களத்தில் செல்வது அதிகம் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதை சரி செய்யும் விதமாக திமுக களத்தில் நேரடியாக இறங்கினால் அதிமுகவுக்கு மிகச் சிறந்த போட்டியை தரலாம்.
நாங்குநேரி தொகுதி :
2016 சட்டப்பேரவை தேர்தலில் நாங்குனேரி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் 74,932 வாக்குகளையும், அதிமுக சார்பில் போட்டியிட்ட 57,617 வாக்குகளையும், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் போட்டியிட்ட சுரேஷ் அலி 14,203 வாக்குகளையும், ம.ந.கூ. சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ஜெயபாலன் 9,446 வாக்குகளையும், பாஜக சார்பில் தனித்து போட்டியிட்ட 6,609 வாக்குகளையும் பெற்றனர். பொதுத்தேர்தலில் நடந்த இது இடைத்தேர்தலிலும் நடக்குமா? என்றால் அது சந்தேகம் தான்.
இங்கு காங்கிரஸூக்கு ஆதரவு குரல்கள் அதிகம் என்றாலும் அது வேட்பாளர்களை பொருத்து மாறுபடவும் வாய்ப்புண்டு. சென்ற முறை வசந்தக்குமார் செலவு செய்வதில் தொடங்கி அவரின் கணக்குகள் அனைத்தும் அடுத்தடுத்து பலித்தன. இம்முறை என்ன நடக்கும் என்பது யோசிக்க முடியாத ஒன்றாக உள்ளது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி களத்தில் நிற்கிறது. இந்தக் கட்சியின் வேட்பாளராக ரூபி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன் நிறுத்தப்பட்டுள்ளார். இவரின் சொந்த ஊர் கன்னியாகுமரி.அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த நாராயணன் இதே மண்ணை சேர்ந்தவர் தான். மொத்தத்தில் அதிமுக வின் இரண்டு தேர்வுகள் அதே இடத்தை சேர்ந்தவர்களை தான். அதிமுக சார்பில் தங்கமணி தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறார்.
இரு வேட்பாளர்களும் செல்வு செய்வதில் தயக்கம் காட்டுவதில்லை. இருந்த போதுமே இரு கட்சிகளுக்கு இடையேயான போட்டி இங்கு அதிகம் தெரிகிறது. திமுக கூட்டணியை வலுப்படுத்தி இங்கு அதிக ஈடுப்பாடு காட்டினால் காங்கிரஸுக்கு வெற்றி கைக்கூடும்.