விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தி.மு.க-வின் புகழேந்தி. இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் 6 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, 8 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் போது, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததுள்ளது என்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்க கூடாது. ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு தடை இல்லை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“