நம்பிக்கை துரோகி என்ற பெயர் ஒருவருக்குப் பொருந்தும் என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான் என்று அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து, தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அண்ணாமலை பொறுப்புக்கு வந்த பிறகு தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார், என்ற எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “நம்பிக்கை துரோகி என்ற பெயர் ஒருவருக்குப் பொருந்தும் என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான். அவரை பிரதமர் அழைத்துச் சென்று டெல்லியில் அவருக்கு அருகிலேயே அமர வைத்தார். ஆனால், அவர் தமிழகம் திரும்பியதும் சுய லாபத்துக்காக, பாஜக வேண்டாம் என்று கூறி ஒதுங்கியவர்.
அதற்கு மக்கள் அவருக்கு பாடம் புகட்டினார்கள். பல இடங்களில் அவருக்கு டெபாசிட் இழக்கச் செய்தனர்.
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில், இவ்வளவு பெரிய ஒரு அரசியல் கட்சி, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்து கட்சி, இத்தனை இடங்களில் டெபாசிட் இழந்தது என்பதற்கான கின்னஸ் சாதனையை செய்துள்ளது.
அதற்கு காரணம், அதிமுக கட்சி நன்றாக இருந்தாலும் கூட, தலைவர்கள் சரி இல்லை என்ற காரணத்துக்காக மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். கோவைக்கு நாங்கள் கொடுத்திருக்கும் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுகிறோம் .எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு 134 வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார். அதை எப்போது நிறைவேற்றுவார்.
தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு கெட்டுபோய் விட்டது, அதனால், அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறியிருக்கிறார். 2026-லும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போயிருக்கும், அப்போதும் அதிமுக சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்குமா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்புகிறேன்.
தேர்தலைப் புறக்கணிப்பதற்கு புதுப்புது காரணங்களைக் கண்டுபிடிக்கும் எடப்பாடி பழனிசாமி, பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக இல்லை என்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர், என்று அவர் கூறினார்.
முன்னதாக சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக வளர்ந்துள்ளது போல மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார். அது உண்மை அல்ல.இந்த தேர்தலில் கோவையில் அண்ணாமலை போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் அதிமுகவை விட குறைவாக பெற்றுள்ளார். பின் எப்படி வளர்ந்துள்ளது என கூற முடியும்.
தினம்தோறும் பேட்டி கொடுத்து மட்டுமே வருகிறார்.
எந்த மத்திய அரசு திட்டத்தையும் தமிழகத்தற்கு கொண்டு வராமல், வாயில் வடை சுட்டு வருகிறார். இதுபோன்ற தலைவரால் தான், 300க்கும் மேற்பட்ட தொகுதியை பெற்ற பாஜக, இப்போது சறுக்கி கூட்டணியில் ஆட்சியில் இருப்பதற்கு காரணம், என கடுமையாக தாக்கிப் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.