/indian-express-tamil/media/media_files/2025/09/27/vao-arrested-for-bribery-2025-09-27-09-41-45.jpg)
ரூ.20,000 பணம் கொடுத்தால்தான் பட்டா: கறாராக லஞ்சம் கேட்டு கையும் களவுமாக பிடிபட்ட வி.ஏ.ஓ
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 55), இவர் ஒரு விவசாயி. இவர் செப்.3-ஆம் தேதி தனது மகள் அருள்பிரபாவுக்காக சாலையகரம் கண்ணப்பன் நகரில் 2 ஆயிரத்து 370 சதுர அடி பரப்பளவில் வீட்டுமனை ஒன்றை வாங்கினார். அந்த வீட்டுமனைக்குப் பட்டா மாறுதல் செய்வதற்காக, சாலையகரம் கிராம நிர்வாக அலுவலரான மேல்காரணையைச் சேர்ந்த சதீஷ் (34) என்பவரை அண்ணாமலை சில நாட்களுக்கு முன்பு அணுகினார்.
அப்போது, பட்டா மாறுதல் செய்து தர ரூ.30,000 லஞ்சமாக தரவேண்டும் என்று சதீஷ் கேட்டதாக கூறப்படுகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அண்ணாமலை, தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். அதற்கு சதீஷ், ரூ.10,000 குறைத்துக்கொண்டு ரூ.20,000 தந்தால் மட்டுமே பட்டா மாறுதல் செய்து தர முடியும் என்று கறாராகக் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அண்ணாமலை, இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார்.
போலீசாரின் அறிவுரைப்படி, ரசாயனப் பொடி தடவிய பணத்தை நேற்று காலை அண்ணாமலை எடுத்துக்கொண்டு சாலையகரம் கிராமத்திற்கு சென்றார். அங்கு அவர் சதீஷைத் தொடர்பு கொண்டபோது, கோலியனூர் கூட்டுச் சாலை அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருப்பதாகக் கூறி, அங்கு வந்து பணத்தைக் கொடுக்கும்படி கூறியுள்ளார். அதன்படி, அண்ணாமலை லஞ்சப் பணத்தை எடுத்துக் கொண்டு அந்த பெட்ரோல் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த சதீஷிடம் கொடுத்தார். அந்தப் பணத்தை அவர் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் துணை சூப்பிரண்டு அழகேசன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் மதன்மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சதீஷை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரை சாலையகரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதுடன், சில ஆவணங்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், விழுப்புரம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.