ஒரு கோடி சப்ஸ்கிரைபர்கள்; ரூ. 10 லட்சம் கொரோனா நிவாரண நிதி; அசத்திய வில்லேஜ் குக்கிங் சேனல்

சேனலுக்காக அவர்கள் சமைத்த உணவை அருகில் உள்ள காப்பகங்களுக்கும் ஆதரவற்றோர்களுக்கும் வழங்கி வந்தனர்.

Village Cooking Channel reaches 1 crore YouTube subscribers

 Janardhan Koushik

Village Cooking Channel reaches 1 crore YouTube subscribers : Village Cooking Channel (VCC) என்ற யூடியூப் சேனல் தமிழகத்தில் 1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் யூடியூப் சேனலாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்திற்காக பங்கேற்க வந்த ராகுல் காந்திக்கு இந்த குழுவினர் காளான் பிரியாணி செய்து கொடுத்து அசத்திய பிறகு இந்தியா முழுவதும் “ஃபேமஸ்” ஆனார்கள். ஞாயிற்றுக் கிழமை அன்று 1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற செய்தியுடன் தங்களின் பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டதோடு டைமண்ட் ப்ளே பட்டன் கிஃப்ட் பாக்ஸ் வழங்கிய யூடியூப் நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தங்கள் யூடியூப் சேனலில் இருந்து கிடைத்த வருவாயில், இந்த குழுவில் உள்ள 75 வயது முதியவர் பெரியதம்பி அவருடைய பேரன்கள் ஐய்யனார், முருகேசன், தமிழ்செல்வன், முத்துமாணிக்கம் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் தமிழக முதல்வர் முக ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 10 லட்சத்தை வழங்கினர்.

கொரோனா நிவாரண நிதியாக ரூ. 10 லட்சத்தை முதல்வர் முக ஸ்டாலிடனிடம் வழங்கும் காட்சிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் பெரியதம்பியும் அவருடைய பேரன்களும் சமைக்கும் வீடியோ ஒன்றுடன் இந்த யூடியூப் சேனல் ஏப்ரல் மாதம் 2018ம் ஆண்டு துவங்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி அவர்கள் அனைத்துவிதமான உணவுகளையும் தயாரித்து வீடியோக்களை வெளியிட்டனர். மட்டன் கைமா, நண்டு வறுவல், அச்சு முறுக்கு, ஆக்டோபஸ் கறி என எதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. சேனலுக்காக அவர்கள் சமைத்த உணவை அருகில் உள்ள காப்பகங்களுக்கும் ஆதரவற்றோர்களுக்கும் வழங்கி வந்தனர்.

என்னுடைய பேரக்குழந்தைகளின் முயற்சியால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. ஒரு நாள் அவர்கள் என்னிடம் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கலாம் என்று கூறினார்கள். நான் யூடியூப் சேனல் என்றால் என்ன என்று கேட்டேன். பிறகு அவர்கள் எனக்கு இது குறித்து விளக்கம் தந்தார்கள். மேலும் பல சமையல் வீடியோக்களையும் காட்டினார்கள் என்று கூறுகிறார் பெரியதம்பி. இவர் சமையல் துறையில் 50 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். என்னை சிறுவயதில் இருந்தே பார்த்து வளர்ந்தவர்கள், என்னுடைய உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த ராகுல் காந்தி, வில்லேஜ் குக்கிங் சேனல் யூடியூப் குழுவினருடன் பேசும் காட்சிகள்

சேனல் துவங்கி 8 மாதங்கள் ஆன பிறகே தங்களின் பார்வையாளர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டோம் என்கிறார் முருகேசன். நான் ஒரு இணைய தளம் வைத்திருந்தேன். அதனை விற்றுவிட்டு பிறகு யூடியூபில் முதலீடு செய்தேன். முதல் 8 மாதத்தில் நாங்கள் 1.5 லட்சம் ரூபாய் வரை இழந்துவிட்டோம். மற்ற சேனல்கள் செய்வதையே நாங்கள் செய்ததால் எங்களின் சேனலுக்கு பெரிய ரீச் இல்லை. எனவே நாங்கள் எங்களின் ஸ்டைலை மாற்றினோம். எங்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களை வைத்து, செயற்கை தனம் இல்லாமல் நாங்கள் வீடியோக்களை பதிவு செய்தோம். 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாங்கள் முதன்முறையாக யூடியூபில் இருந்து ரூ. 37 ஆயிரம் சம்பாதித்தோம். இதுவே எங்களின் முதல் வருமானமாக இருந்தது. பிறகு எங்களின் வழி என்ன என்று நாங்கள் புரிந்து கொண்டோம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய முருகேசன் கூறினார்.

கொரோனாவுக்கு முன்பு நாங்கள் மூன்று நாட்களுக்கு ஒரு வீடியோ அப்லோட் செய்தோம். ஊரடங்கின் காரணமாக வாரத்திற்கு ஒரு வீடியோ தான் அப்லோட் செய்ய முடிந்தது. மேலும் நாங்கள் சமைத்த உணவை அருகில் உள்ள கிராம மக்களுக்கும் தந்து கொண்டிருந்தோம். விதிமுறைகளின் காரணமாக அது எங்களால் முடியாமல் போனது என்று சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ராகுல் காந்தியை சந்தித்ததை நினைத்து தற்போதும் பெருமிதம் கொள்கிறார் பெரியதம்பி. என்னுடைய குழந்தைகள், ராகுல் காந்தி நம்மை சந்திக்க வருகிறார் என்று கூறிய போது என்னால் நம்பவே முடியவில்லை. அவர் எங்களை சந்தித்தார். நாங்கள் சமைக்கும் போது கூடவே இருந்து சமைத்தார். 20 அல்லது 30 நிமிடங்கள் தான் இருப்பார் என்று கூறினார்கள். ஆனால் அவர் ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாக இங்கே தங்கினார். மீண்டும் சந்திப்போம் என்று கூறினார். அதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றோம் என்று பெரியதம்பி கூறியுள்ளார்.

பெரியதம்பி மட்டும் அல்லாமல், அவருடைய பேரன்களும் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்கள். வீடியோவை பதிவு செய்து எடிட் செய்யும் சுப்பிரமணியன் வணிகவியலில் எம்.பில். முடித்துள்ளார். தமிழ் செல்வன் நானோடெக்னாலஜியில் எம்.பில் முடித்துள்ளார். முத்துமாணிக்கம் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ளார். அய்யனார் தற்போது பி.காம். முடித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Village cooking channel reaches 1 crore youtube subscribers

Next Story
கொரோனா : 4000-க்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்புCorona virus
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com