/tamil-ie/media/media_files/uploads/2022/10/New-Project56.jpg)
வில்லிசை வேந்தர் என அழைக்கப்படும் பிரபல இசைக்கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக இன்று (செப்டம்பர் 10) காலமானார். அவருக்கு வயது 93. சுப்பு ஆறுமுகம், திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் 1928ஆம் ஆண்டு பிறந்தவர்.
இவர் தனது வில்லுப் பாட்டின் மூலமாக சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மீகம், தேச பக்தியை வளர்த்தவர். தனது 14-வது வயதில் குமரன் பாட்டு கவிதை தொகுப்பு மூலமாக பிரபலமடைந்தார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் உதவியால் சென்னைக்கு வந்தவர். பின்னர், மகாத்மா காந்தியின் சுயசரிதையை வில்லிசையாக பாடி அனைவரது கவனத்தையும் பெற்றார்.
கலைவாணரின் 19 திரைப்படங்களிலும், நாகேஷின் 60க்கும் மேற்பட்ட படங்களிலும் நகைச்சுவைப் பகுதிகளை எழுதி திரைத்துறையிலும் பங்காற்றினார். காந்தியின் கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை போன்றவற்றை வில்லிசையாக பாடியுள்ளார். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் வில்லுப்பாட்டு பாடி மக்களிடையே கொண்டு சேர்த்தார்.
இவரது இசைப்பணியைப் போற்றும் வகையில் மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது கடந்த 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு மத்திய அரசின் சங்கீத அகாடமி விருது வழங்கப்பட்டது. சுப்பு ஆறுமுகத்திற்கு கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது.
சுப்பு ஆறுமுகத்தின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், இசைக்கலைஞர் எனப் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சுப்பு ஆறுமுகத்தின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார். சுப்பு ஆறுமுகத்தின் இறுதிச்சடங்கு சென்னை கே.கே நகரில் உள்ள இல்லத்தில் இன்று மாலை அல்லது நாளை காலை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.