விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்று, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வேளாண்மை இணை இயக்குநர் தலைமையில் கடந்த 14.03.2025 அன்று வேளாண்மைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில், நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
பெல்ட் வகை (Track Type Combine Harvester) நெல் அறுவடை இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 2600, 2 டயர் வகை (Wheel Type) நெல் அறுவடை இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1700, 4 டயர் வகை (Wheel Type) நெல் அறுவடை இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 2100 என்று வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும் என்று தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக வாடகை கேட்டால், விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.